மூக்கில் அணிந்திருந்த ஆபரணம் 5 வருடங்களுக்கு பின் நுரையீரலுக்குள் கண்டுபிடிப்பு

0
348

இளைஞர் ஒருவர் மூக்கில் அணிந்திருந்த ஆபரணம் 5 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் இவ்வளவு காலமும் அது அவரின் நுரையீரலுக்குள் இருந்தமை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜோய் லைகின்ஸ் எனும் 35 வயதான இளைஞருக்கே இந்த விசித்திர அனுபவம் ஏற்பட்டுள்ளது.

சின்சினாட்டி நகரைச் சேர்ந்த ஜோய் லைகின்ஸ் தனது உடலில் 12 துளைகளை இட்டு பல ஆபரணங்களை அணிந்திருந்தார். இரு மூக்குத் துவாரங்களுக்கு இடையிலும் அவர் துளையிட்டு வளையமொன்றை அணிந்திருந்தார்.

5 வருடங்களுக்கு முன்னர் ஒருநாள் லைகின்ஸ் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தபோது மூக்கில் அணிந்திருந்த வளையம் காணாமல் போயிருந்தது.

எக்ஸ் றே பரிசோதனை

அவ்வேளையில் “அந்த வளையத்தை நான் அணிய ஆரம்பித்து 3 அல்லது 4 வருடங்கள் கடந்திருந்தன. அந்த வளையத்தை எல்லா இடங்களிலும் தேடினேன். கட்டிலை கவிழ்த்தும் தேடினேன். அது கிடைக்கவில்லை. சிலவேளை அதை நான் விழுங்கியிருக்கக் கூடும் என நினைத்தேன்” என ஜோய் லைகின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவ்வளையம் லைகின்ஸின் நுரையீரலுக்குள் கிடப்பது 5 வருடங்களின் பின்னர் எக்ஸ் றே பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சில வாரங்களுக்கு முன்னர் அதிகாலையில் கடுமையான இருமல் காரணமாக லைகின்ஸ் விழித்தெழுந்தார்.

எனது முதுகு வலிக்கும் அளவுக்கு கடுமையான இருமல் ஏற்பட்டது. எனது சுவாசப்பாதையில் ஏதோ அடைபட்டிருப்பதைப் போன்று உணர்ந்தேன். ஏனக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளது என நான் எண்ணினேன். நிமோனியா அல்லது அது போன்ற ஏதாவது தொற்று ஏற்பட்டிருக்கலாம் என நான் ஆரம்பத்தில் கருதினேன்.

இதையடுத்து வைத்தியசாலைக்கு சென்றபோது, அவரின் நுரையீரலில் மேற்படி வளையம் சிக்கியிருப்பது தெரியவந்தது.

நுரையீரலுக்குள் எனது ஆபரணம் சிக்கியிருக்கும் என நான் எண்ணவே இல்லை. இது போன்ற ஒன்றை நான் கேள்விப்பட்டதில்லை.

இவ்விடயத்தை எனது மனைவியிடம் கூறியபோது அவரும் பெரும் வியப்படைந்தார் 3 நாட்களின் பின்னர் மருத்துவர்கள் அந்த ஆபரணத்தை ஜோய் லைகின்ஸின் நுரையீரலில் இருந்து அகற்றினர் என்று கூறியுள்ளார்.