திலீபனின் பொது கட்டடமைப்புக்கு த.தே.ம.மு எதிர்ப்பு!

0
59

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான பொதுக் கட்டடமைப்பு ஒன்றை அமைப்பதற்கான கூட்டத்தை எதிர்ப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான பொதுக் கட்டடமைப்பு தொடர்பான கூட்டம் நடைபெறவுள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வரால் பல தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திலீபனின் பொதுக் கட்டமைப்பு தொடர்பில் த.தே.ம.மு வெளியிட்ட அறிக்கை! | The Report By Dpm Public Structure Of Dileban

தற்போது யாழ்.மாநகர சபையை ஆட்சி செய்யும் தரப்புக்கள் அரசாங்கத்தின் முகவரான ஈ.பி.டி.பியின் தயவில் முற்று முழுதாக இயங்கும் தரப்புக்களாகும். 2010 ஆம் ஆண்டு தற்போது ஆட்சி செய்யும் தரப்பினரின் எஜமான்களான ஈ.பி.டி.பியினரின் ஆளுகைக்குள்ளேயே யாழ்.மாநகரசபை இருந்தது.

எனவே, தியாக தீபத்தின் புனிதமான நினைவேந்தலை நினைவுகூரும் கட்டடமைப்பு யாழ்.மாநகர சபை உருவாக்குவதை நாம் எதிர்க்கின்றோம். அந்தவகையிலே சிறிலங்கா அரச முகவர்களின் தயவில் சபையை நிர்வகிக்கும் தரப்புக்களிடம் நினைவேந்தல்களைக் கையளிக்கும் வரலாற்றுத் தவறினை நாம் ஒருபோதும் செய்யப்போவதில்லை.

தமிழ் மக்களின் உரிமைக்காகவும். சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவுமே தியாக தீபம் ஈகம் செய்திருந்தார். தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான உண்மையான இலட்சியத்தின் பின்னால் மக்களை அணிதிரட்டுவதற்காகவே தியாக தீபத்தின் நினைவேந்தல் செய்யப்படுகின்றது.

திலீபனின் பொதுக் கட்டமைப்பு தொடர்பில் த.தே.ம.மு வெளியிட்ட அறிக்கை! | The Report By Dpm Public Structure Of Dileban

அத்தகைய நினைவேந்தலை பேரினவாதத்துக்கு பின்னால் நின்று அதன் முகவர்கள் குழப்ப நினைப்பதை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்துக்காகவும் ஒற்றையாட்சிக்கு எதிராகவுமே தியாக தீபம் திலீபனின் மாபெரும் தியாகம் அமைந்திருந்தது.

தியாகதீபம் திலீபனின் ஈகத்தின் வரலாற்றையும் அவரின் கனவையும் சிதைக்கும் வண்ணம் அதே ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் முகவர் அமைப்புக்கள் இந்த நினைவேந்தலை செய்வது தமிழ் மக்களின் உன்னதமான தியாகம் நிறைந்த உரிமைப் போராட்டத்துக்கும் தியாக தீபம் திலீபனின் ஈடிணையற்ற தியாகத்துக்கும் செய்யும் துரோகமாகவே அமையும்.

ஆரம்பம் முதலே தியாக தீபத்தின் நினைவேந்தலை திட்டமிட்டுக் குழப்பி எம்மீது சேறு பூசல்களைச் செய்ய முயலும் முகவர் அமைப்புக்களே நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு என்னும் போர்வையில் தியாக தீபத்தின் நினைவேந்தலைத் தொடர்ச்சியாகக் குழப்ப முற்படுகிறார்கள்.

இத்தகைய கபட நோக்கத்துடன் உருவாக்கப்படும் ‘பொதுக் கட்டமைப்பு’ என்னும் சதிமுயற்சிக்கு நாம் துணை போகமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.