எதிர்க்கட்சி தலைவர் பதவியை பாதுகாக்கவே சஜித் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைய மறுக்கிறார் – அமைச்சர் மஹிந்த அமரவீர

0
446

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாட்டைப் பற்றி சிந்திக்காமல் சுயநலமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் சர்வகட்சி அரசாங்கத்தில் இணையாமலுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு அண்மைக்காலமாக எந்தவொரு விடயத்திலும் திருப்தியடைய முடியாத நிலைமையே காணப்படுகிறது. அவர் மிகவும் சுயநலமாகவே சிந்திக்கின்றார்.

நாட்டைப் பற்றி சிந்திக்காமல் , தனது எதிர்க்கட்சி தலைவர் பதவியை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்துடனேயே அவர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோகும் என்ற அச்சமே , சஜித் பிரேமதாச சர்வகட்சி அரசாங்கத்தில் இணையாமலிருப்பதற்கான காரணமாகும்.

தற்போதுள்ள நிலைமையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் பாதுகாத்துக் கொண்டு , நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே செயற்பட வேண்டும்.

எதிரக்கட்சி தலைவர் கமராக்கள் முன்னிலையில் நிகழ்ச்சியைக் காண்பித்தாலும் , எதனையும் நடைமுறையில் செயற்படுத்துவதில்லை.

நாமும் சென்று அவருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருக்கின்றோம். அவர் சிறந்த மனிதன். இணைந்து பணியாற்றினால் அனைத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும்.

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு காணப்படும் பிரச்சினைகளை விட , எதிர்க்கட்சி தலைவருக்கு வேறெந்த பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பில்லை. ரஞ்சன் ராமநாயக்க ஏற்கனவே கூறியதைப் போன்று அனைவரும் ஒன்றாக இருக்கலாம். எதிர்க்கட்சி தலைவரும் அவ்வாறே இருக்கின்றார் என்றார்.