ஜனாதிபதி ரணில் பற்றி அன்ரன் பாலசிங்கம் கூறியது இன்று பலித்துள்ளது!

0
223

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பலரும் அரசியல் நரித்தந்திரம் மிக்கவர் என பலரும் கூறிவரும் நிலையில் மூத்த ஊடகவியலாளர் நிக்சன் இது தொடர்பில் அவரது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது,

ரணில் விக்கிரமசிங்கவை அன்ரன் பாலசிங்கம் நரி எனக் கூறியபோது சிங்கள அரசியல் தலைவர்கள் பலரும் அன்று கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஆத்திரமடைந்தனர். அப்படிச் சொன்னதற்காகச் சர்வதேச நாடுகள்கூட அன்ரன் பாலசிங்கத்தை ஓரக்கண்ணால் பார்த்தன.

ஆனால் 2009 இற்குப் பின்னரான சூழலில் இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்கள அரசியல்வாதிகள் பலரும் ரணில் விக்கிரமசிங்கவை நரி என்றே விழித்துக்கூறினர்.

ஜனாதிபதி ரணில் குறித்து  அன்ரன் பாலசிங்கம் அன்று கூறியது இன்று பலித்தது! | Anran Balasingham Said Ranil Has Worked Today

சர்வதேச நாடுகளும் ரணில் விக்கிரமசிங்கவின் நகர்வுகளை முன் எச்சரிக்கையாகவே எடுத்துக் கொண்டன. அவ்வளவு தூரத்துக்கு ரணிலின் அரசியல் நகர்வுகள் அவர்களைத் திக்குமுக்காட வைத்திருக்கின்றன என்பதே அதன் பொருள்.

இருந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவிடம் புவிசார் அரசியல் புலமை இருப்பதாகச் சர்வதேச நாடுகள் இன்றுவரை முன் எச்சரிக்கையோடு நம்புகின்றன. இதன் காரணத்தினாலேயே ஜனாதிபதித் தெரிவின் போது டளஸ் வந்தால் கையாள முடியும் என்ற ஒரு சிறிய நம்பிக்கை அமெரிக்க – இந்திய அரசுகளுக்கு இருந்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இந்த நிலையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் ரணில் தன்னுடைய அரசியல் நகாரீகமற்ற தன்மையை வெளிப்படுத்திருக்கிறார். ஜனாதிபதித் தெரிவில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தனக்கும் வாக்களித்துள்ளனர் என்று அவர்கள் முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க கூறியமை அவருடைய அரசியல் வறுமையைப் போட்டுக் காண்பித்துள்ளது.

அதாவது சர்வதேசம் இன்றுவரை நம்பிய ரணிலின் அரசியல் புலமை என்பதற்குள் சின்னத் தனமும் (Smallness) உண்டு என்பது வெளிப்பட்டுள்ளது. பிரித்தாளும் தந்திரத்துக்காகவே தனக்கு வாக்களித்த உள்ளகத் தகவலை ரணில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முன்னிலையில் வெளியிட்டார் என்று சிலர் கருதலாம். ஆனால், கூட்டமைப்பைப் பிரித்தாள வேணடிய அவசியமே இல்லை. ஏற்கனவே அது பிரிந்துதான் இருக்கிறது.

வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்தால் வெளியே சொல்லக்கூடாதென்ற பல இராஜதந்திரத் தகவல்களைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் திரிபுபடுத்திக்கூறி அசிங்கப்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களும் உண்டு.

டளஸ் அழகப் பெருமாவை ஆதரிக்கும் விடயத்தில் இந்தியத் துணைத் தூதுவர் தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படும் விடயமும் அது பற்றிய முன்னுக்குப் பின் முரணான தகவல்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இயலாமையைப் பகிரங்கப்படுத்தியுள்ளது.

முதிர்ச்சியடைந்ததாகத் தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் தமிழ்த் தலைவர்களின் முதிரச்சியற்ற தன்மையும் அது கோடிட்டுக் காண்பித்தது. இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவும் அசிங்கமான அரசியல்வாதியாகத் தன்னை நிறுவியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் குறித்து  அன்ரன் பாலசிங்கம் அன்று கூறியது இன்று பலித்தது! | Anran Balasingham Said Ranil Has Worked Today

அன்டன் பாலசிங்கம் அன்று கூறிய நரி என்ற வார்த்தை 2009 இற்குப் பின்னரான சூழலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாத்திரமல்ல ஏனைய சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் குறிப்பாகத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் நரி என்ற சொல்லுக்கு விதிவிலக்கானவர்கள் அல்லர் என மூத்த ஊடகவியலாளர் நிக்சன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.