மக்களை வியப்பில் ஆழ்த்திய பிரெஞ்சு கலைஞரின் டிஜிட்டல் ஆர்ட்!

0
690

பாரிசியன் கலைஞரான லூகாஸ் வாஸ்காங்கேவின் (Lucas Vaskange) டிஜிட்டல் ஆர்ட்டை எவ்வளவு ஜும் செய்து பார்த்தாலும் அதில் புதிய புதிய கதைக்களத்தோடு ஓவியங்கள் அமைந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாகவும் இந்த வீடியோவைப் பார்க்கும் எவரும் ஒரு நிமிடம் கூட கண்களை வெளியில் எடுக்கமுடியாத அளவிற்கு அத்தனை ஆச்சரியம் நிறைந்ததாகவும் கூறப்படுகிறது.

Lucas Vaskange

பாரிசியன் கலைஞரான லூகாஸ் வாஸ்காங்கே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “எனது கலைப்படைப்பின் உண்மையான விடியோ இங்கே.. எல்லையற்ற பல கதைகளை கண்டறிய காத்திருங்கள்“ என்ற குறுஞ்செய்தியோடு வீடியோ ஒன்றை டிவிட் செய்துள்ளார்.

வீடியோ தொடக்கத்தில் ஒருவர் சிறிய அறைக்குள் அமர்ந்து ஓவியம் வரைவது போன்று தோன்றுகிறது. அதில் உள்ள சின்ன புகைப்படத்தை கிளிக் செய்தால் உள்ளே புதிய ஒவிய கதைகளைக் காணமுடிகிறது. அந்த பக்கத்தில் உள்ள சிறிய ஜன்னலை கிளிக் செய்து பார்த்தால் அதில் இருந்து ஒரு ரயில் கடந்து செல்வதாகவும் அதனுள் பயணி ஒருவர் அமர்ந்திருப்பது போன்று தெரிகிறது.

பின்னர் அதனைத் தொடர்ச்சியாக ஜூம் செய்துக்கொண்டே செல்லும் போது புதிய புதிய ஓவியங்களை நம்மால் காணமுடிகிறது. குறிப்பாக இதற்கு எந்த முடிவும் இல்லை. எவ்வளவு ஜும் செய்தாலும் சென்று கொண்டே இருக்கும் வகையில் இந்த ஓவியம் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. கலைஞர் வாஸ்காங்கேவின் பணி பலரின் மனதைக் கவர்வதோடு அவர்கள் இதற்கு முன் இவ்வளவு ஆழமான திசையன் கலையைப் பார்த்ததில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

மேலும் இது புதிய தொழில்நுட்பத்தின் புத்திசாலித்தனமான பயன்பாடு எனவும் இது பல எண்ணற்ற அற்புதமானப் படைப்புகளுக்கு நிச்சயம் வழிவகுக்கும். குறிப்பாக இந்த டிஜிட்டல் ஓவியங்கள் மக்களை இரண்டாவது பரிமாணத்திற்கு அப்பால் அழைத்துச் செல்லும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. குறிப்பாக டிஜிட்டல் சகாப்தம் மக்களுக்கு இது போன்று ஆரோக்கியமான விஷயங்களை எடுத்துச்சென்றால் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கும் வரும் தலைமுறையினருக்கு உதவியாக இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது.