பிரதமராக வடக்கு எம்.பி ஒருவரை நியமித்திருக்கலாம்

0
511

பிரதமர் பதவியை வடக்கு தமிழ் எம்.பி ஒருவருக்கு வழங்க முடியுமாக இருந்திருந்தால் வெளியில் இந்த சபை குறித்து கௌரவமான நிலை உருவாகியிருக்குமென தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் பிரதிபலித்தது மக்களின் விருப்பம் அல்ல என்றும் மக்களின் விருப்பத்தை சிதைப்பது மட்டுமே என்றும் அவர் கூறினார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குறித்து தமக்கு ஏற்கனவே தெரியுமென்று குறிப்பிட்ட அவர், இந்த முடிவு எதிர்க்கட்சிகள் வலுப்பெறுவதையும் காட்டுகிறது என்றார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவு தொடர்பில் தமது தரப்பு யோசனை முன்வைத்ததாகவும் அவை ஏற்கப்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,முதலில் புதிய ஜனாதிபதிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களிடம் வலுவான எதிர்க்கட்சி முகாமுள்ளது.

இந்த பாராளுமன்றத்தில் மக்களின் விருப்பத்தின் திரிபுபடுத்தப்பட்ட பிரதிபலிப்பு காட்டப்பட்டது.வெளியிலுள்ள மக்களுக்கும் இந்த சபைக்குமிடையில் பெரும் முரண்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. நாடு ஒரு பெரிய பேரழிவிலுள்ளது. இளம் தலைமுறையினர் தங்களது எதிர்காலம் குறித்து மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பேச்சுவார்த்தைகளின் போது ஜனாதிபதி பதவிக்கு சபாநாயகரின் பெயரும் பிரதமர் பதவிக்கு சுமந்திரன் எம்.பியின் பெயர் கூட பிரேரிக்கப்பட்டது.இரு பெண்களை நியமிக்க வேண்டுமென ரவூப் ஹக்கீம் யோசனை முன்வைத்தார்.பிரதமர் பதவியை வடக்கு தமிழ் எம்.பி ஒருவருக்கு வழங்க முடியுமாக இருந்தால் வெளியில் இந்த சபை குறித்து வெளியில் கௌரவமான நிலை உருவாகியிருக்கும். பெண் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டிருந்தால் முன்மாதிரியாக அமைந்திருக்கும்.

டளஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதாக த.தே.கூட்டமைப்பு , சுதந்திர கட்சி மற்றும் சுயாதீனமான குழு உட்பட பல கட்சிகள் அறிவித்திருந்தன. அவற்றின் ஆதரவு கிடைத்திருந்தால் 113 ற்கும் அதிக வாக்குகள் கிடைத்திருக்கும். கடந்த காலத்தில் பணத்துக்காக எம்.பிக்கள் விலை போயினர். அதே நிலை இன்றும் நடந்திருக்கலாம் என்றார்.(பா)