இந்தியாவில் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட நாய் வளர்ப்பால் மூதாட்டி பலி!

0
685

இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் 82 வயது மூதாட்டியை பிட்புல் வகை நாய் கடித்து குதறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேரந்தவர் அமித். அங்குள்ள பல ஜிம்களில் பயிற்சியாளராக இவர் வேலை செய்து வருகிறார். அமித் தனது வீட்டில் பிட்புல் வகை நாயை வளர்த்து வந்தார்.

மிகவும் ஆபத்தானதாக அறியப்படும் இந்த (Pitbull dog) பிட்புல் நாயை வீட்டில் வைத்து வளர்க்க வேண்டாம் என அக்கம்பக்கத்தினர் கூறிய போதிலும் அதனை அமித் கேட்கவில்லை. இதனிடையே, கடந்த 12-ஆம் திகதியன்று காலை வழக்கம் போல அமித் ஜிம்முக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், அவரது தாயார் சுஷிலா திரிபாதி உலர வைத்திருந்த துணிகளை எடுப்பதற்காக மொட்டை மாடி சென்றார். அப்போது அங்கிருந்த பிட்புல் நாய் திடீரென சுஷிலா மீது பாய்ந்து முகம், கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் கடித்து குதறியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்துள்ளார்.

ஆனால், அந்த சமயத்தில் பக்கத்து வீடுகளில் யாரும் இல்லாததால் உதவிக்கு யாரும் வரவில்லை. இந்த சூழலில் பிற்பகல் 11 மணியளவில் அமித் வீடு திரும்பியுள்ளார். அப்போது தாயார் வீட்டில் இல்லாததால் அவரை தேடி மாடிக்கு சென்றுள்ளார்.

அங்கு தனது தாயார் இரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் அருகில் பிட்புல் நாய் அமர்ந்திருப்பதையும் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உடனடியாக தனது தாயார் சுஷிலா திரிபாதியை மருத்துவமனைக்கு அவர் கொண்டு சென்றார்.

அங்கு சுஷிலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தாயாருக்கு இறுதிச் சடங்கை முடித்த அமித் தனது பிட்புல் நாயை தூக்கி வந்து மாநகராட்சி வாகனத்தில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.

தனது தாயை கொன்றுவிட்டதே என எந்தக் கோபமும் இன்றி அந்த நாயை அவர் உடலோடு அணைத்துக் கொண்டு வந்து வாகனத்தில் விட்டது பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.

 இதனிடையே, பிட்புல் நாயை வளர்க்க முறையான உரிமத்தை அமித் பெற்றிருந்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதேவேளை கனடா மற்றும்  அமெரிக்காவில் உள்ளிட்ட  பல நாடுகளில் பிட்புல் நாயை வீட்டில் வைத்து வளர்க்க தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Gallery