கோட்டாபயவின் வீட்டை முற்றுகையிட்ட ஹிருணிகா கைது!

0
228

கோட்டையிலுள்ள அரச தலைவரின் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கோட்டை துறைமுக காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 10 மணியளவில் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான குழு அரச தலைவரை வெளியேறுமாறு குறித்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்திருந்தது.

மக்களை மீண்டும் மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளிவிடாமல் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வீட்டுக் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி அரச தலைவர் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய பெண்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர தலைமையில் இந்த போராட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொது செயலாளர் உமாசந்திரப் பிரகாஸ் உட்பட பெருமளவான ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்றைய தினம் நாடாளுமன்றம் சென்றிருந்த அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினை எதிர் கட்சியினர் கோட்டா கோ ஹோம் என கோஷம் எழுப்பி நாடாளுமன்றத்தில் இருந்து விரட்டியடித்துள்ளனர்.

7ஆம் திகதி மற்றும் 9ஆம் திகதி போராட்டங்கள்

இதேவேளை, எதிர்வரும் 7ஆம் திகதி மற்றும் 9ஆம் திகதி தென்னிலங்கையில் பெரும்பாலான இடங்களில் போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் ஆரம்ப கட்டமாகவே இந்த போராட்டம் அரச தலைவர் இல்லத்திற்கு முன்பான ஹிருணிகா பிரேமசந்திரவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் 7ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.