தம்புள்ளையில் எரிபொருள் பெற முயற்சித்த வெளிநாட்டவர்களால் குழப்பம்

0
527

தம்புள்ளையில் எரிபொருள் பெற்றுக் கொள்ள முயற்சித்த வெளிநாட்டவர்களால் தம்புள்ளை ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தம்புள்ளை ஐஓசி பெற்றோல் நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் பெருமளவிலான வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள காத்திருந்தனர்.

எனினும் வரிசையில் நின்றிருந்த பொது மக்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு பெற்றோல் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து தம்புள்ளை ஏ.எஸ்.பி அலுவலகத்திற்கு சென்ற வெளிநாட்டவர் குழுவொன்று தம்புள்ளை உதவி பொலிஸ் அத்தியட்சர் சந்தன விஜேசேகரவிடம் சுற்றுலா பயணிகளுக்கு எப்படியாவது எரிபொருள் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்ற தம்புள்ளை ASP சந்தன விஜேசேகர அங்கு காத்திருந்த வெளிநாட்டவர்களுக்கு தலா 10 லீற்றர் பெற்றோலை வழங்குமாறு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரிடம் கோரிக்கை விடுத்தார்.

எனினும் இவர்களுக்கு எரிபொருளை வழங்குவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும், ஆனால் மக்கள் எதிர்ப்பை சம்பாதிக்க விரும்பவில்லை என்றும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஏ.எஸ்.பி சந்தன விஜேசேகர, எரிபொருளுக்காக கத்திருந்த மக்களிடம் கோரிக்கை விடுத்ததால், சம்பவ இடத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் , பொலிஸாருக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருளின் ஒரு தொகையை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குமாறு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு ஏஎஸ்பி அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.