நாடு முழுவதும் முடங்கும் அபாயம்!

0
551

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக முழு நாடும் முடக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக கல்விசாரா ஊழியர் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் திலகரத்ன, தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு மத்தியில் கடமைக்கு சமூகமளிப்பதில் அரச ஊழியர்கள் பல சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்தார்.

இலங்கையிடம் 6,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மாத்திரமே கையிருப்பில் என்றும், எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் அஜித் திலகரத்ன குறிப்பிட்டார்.

டீசல் இறக்குமதியின் ஒரு தொகுதி நேற்று கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், எதிர்காலத்தில் நாடு ஸ்தம்பிதமடைந்து முடக்கநிலைக்கு செல்லும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதன்போது முடக்க நிலையை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிடாத போதிலும், தொலைநோக்கற்ற முடிவுகளால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க இயாலாமையின் விளைவால் அவ்வாறான நிலைமைகள் உருவாகும் என அஜித் திலகரத்ன மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.