“ரணிலால் தவிர்க்கப்பட்ட பெரும் ஆபத்து” பாலித ரங்கே பண்டார

0
451

ரணில் விக்ரமசிங்க பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்காவிட்டால் நாட்டுக்குள் பாரிய அழிவு ஏற்பட்டிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். 

தற்போது  எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையினால் இலங்கைக்கு ஏற்படவிருந்த பாரிய அழிவு ரணில் விக்ரமசிங்கவினால் தவிர்க்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். 

அத்துடன் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள பின்வாங்கியவர்களே ரணில் விக்ரமசிங்கவை விமர்சித்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். 

சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

பாலித ரங்கே பண்டார

நாடு பொருளாதார ரீதியில் பின்தள்ளப்பட்டு வங்குராேத்து அடைந்த நிலையிலும் உலக நாடுகள் இலங்கையை அந்நியபடுத்தி இருந்த நிலையிலுமே ரணில் விக்ரமசிங்க பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டு ஒருமாத காலம் முடிவடைந்திருக்கின்றது. இந்த காலப்பகுதியில் நாடு எதிர்கொண்டு பிரதான பிரச்சினைக்கு தீர்வுகாண பல நடவடிக்கைகளை எடுத்திருப்பதுடன் இன்னும் பல விடயங்களை முன்னெடுக்க தேவையான வேலைத்திட்டங்களை செய்துவருகின்றார்.

அத்துடன் ராஜபக்சவினர் சர்வதேச நாடுகளில் உதவி செய்யக்கூடிய நாடுகளை பகைத்துக்கொண்டு இருந்தனர். அதனால் எமக்கு உதவி செய்ய அந்த நாடுகள் முன்வரவில்லை. தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க உலக நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி இலங்கைக்கு உதவுமாறு கேட்டு வருகின்றார்.

அதன் பிரகாரம் பல நாடுகள் இலங்கைக்கு உதவி செய்வதாக உறுதியளித்திருக்கின்றன. குறிப்பாக அமெரிக்க 120 மில்லியன் டொலர் உதவி முன்வந்திருக்கின்றது. இந்தியாவின் உதவி தொடர்ந்து கிடைக்கப்பெறுகின்றது.

அதேபோன்று சீனா கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றது. முதற்கட்ட சுகாதார உபகரணங்களை சீனா வழங்கி இருக்கின்றது. அடுத்த கட்டமாக இன்னும் பல உதவிகளை வழங்குவதாக சீன தூதுவர் தெரிவித்திருக்கின்றார்.

அதேபோன்று சீனாவின் அரசி சில தினங்களில் கிடைக்க இருக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கமைய சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் குழுவொன்று இலங்கைக்கு வர இருக்கின்றது..

அவர்களுடன் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படும். அதன் பிரகாரம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை விரைவாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோம்.

மூன்று வாரங்கள் தொடரும் நெருக்கடி நிலை

மேலும் தற்போது நாட்டில் பாரிய எரிபொருள் பிரச்சினை இருந்து வருகின்றது. எதிர்வரும் 3 வாரங்களுக்கு இந்த பிரச்சினை இருக்கும் என பிரதமர் ஏற்கனவே அறிவித்திருந்தார். மூன்று வாரங்களுக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிப்போம்.

நாடு பாரிய வங்குராேத்து அடைந்த நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். ஆனால் இன்று ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சியில் சிலர் விமர்சித்து வருகின்றனர். இவ்வாறு விமர்சிப்பவர்களை அன்று இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு அழைத்தபோது பின்வாங்கினார்கள். ரணில் விக்ரமசிங்க பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்காவிட்டால் நாட்டுக்குள் பாரிய அழிவு ஏற்பட்டிருக்கும். ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டிருக்கும் இந்த பொறுப்பு இலகுவானதல்ல என்பது அவரை விமர்சிப்பவர்களுக்கு தெரியும்.

என்றாலும் ஏற்றுக்கொண்ட பொறுப்பை எப்படியாவது நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அத்துடன் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நிவாரண வரவு செலவு திட்டம் ஒன்றை பிரதமர் விரைவில் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கின்றார்  என குறிப்பிட்டுள்ளார்.