சிங்கப்பூரில் திருமண மோசடியில் ஈடுபட்ட இந்தியப் பெண்

0
586

தமிழகத்தை சேர்ந்தவர் கோவிந்த ராஜசேகரன். இவர் தனது 29 வயது மகனுக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வந்தார்.

இதற்காக அவர் இணையதளத்தில் தனது மகன் பற்றிய விவரங்களை தெரிவித்து இருந்தார்.

இதை பார்த்த சிங்கப்பூரில் வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த மல்லிகா ராமு (வயது 51) என்ற பெண் கோவிந்த ராஜசேகரை தொடர்பு கொண்டார்.

தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் தான் ஆஸ்திரேலியா நாட்டு கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தனது போட்டோவை அனுப்பினால் 51 வயது என்பது வெளியில் தெரிந்து விடும் என நினைத்து தனது உறவுக்காரரான 25 வயதுடைய பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டார்.

இதை பார்த்த கோவிந்த ராஜசேகர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். இந்த நிலையில் தனது தாய்க்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் அதனால் உடனடியாக பணம் தேவைப்பபடுவதாகவும் மல்லிகா கோவிந்த ராஜசேகரிடம் கூறினார்.

இதை நம்பி அவரும் ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன் பிறகு மல்லிகா இவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார். மேலும் திருமணத்தையும் தள்ளிப்போட்டபடி சென்றார்.

இதனால் சந்தேகம் அடைந்த கோவிந்த ராஜசேகர் போலீசில் புகார் செய்தார். சிங்கப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மல்லிகா ராமுவை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் தனக்கு பதில் வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை காட்டி திருமண மோசடியில் ஈடுப்பட்டதும் தெரிந்தது.

இதையடுத்து மல்லிகா சிங்கப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 7 மாதம் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இதற்கு முன்பும் மல்லிகா இதுபோன்று திருமண மோசடி செய்து பலரிடம் பணம் பறித்து போலீசில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.