மஹிந்த தங்கியுள்ள இரகசிய இடத்துக்கு சென்று சி.ஐ.டி விசாரணை!

0
184

மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் தங்கியுள்ள பாதுகாப்பான இரகசிய இடத்துக்குச் சென்று சி.ஐ.டியினர் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அரசாங்கத்தை பதவி விலககோரி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் (Mahinda Rajapaska) சி.ஐ.டி. இன்று ( 26-05-2022) விசாரணை நடாத்தியுள்ளது.

சி.ஐ.டி.யின் பணிப்பாளரின் கீழ் செயற்படும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் தலைமையிலான விஷேட விசாரணைக் குழுவினர், கொழும்பில் மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள பாதுகாப்பான இரகசிய இடத்துக்கு சென்று இந்த விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலத்தை பதிவு செய்ததாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் குறிப்பிட்டன.

சுமார் மூன்று மணி நேரம் அந் நடவடிக்கைகள் நீடித்ததாகவும், அதன்போது முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் ஜூன் முதலாம் திகதி நீதிமன்றுக்கு அறிக்கையிட சி.ஐ.டி.யினர் நடவடிக்கை எடுப்பர் எனவும் குறித்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மே 9 ஆம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம மீதான தாக்குதல்களின் ஆரம்ப புள்ளி, அலரிமாளிகையில் நடந்த கூட்டமே என சட்ட மா அதிபரால் கோட்டை நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான பின்னணியில், குறித்த கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடந்த நிலையில், கடந்த மே 12 ஆம் திகதி அவர வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்தது.

இந் நிலையிலேயே இன்று அது குறித்து மஹிந்த ராஜபக்ஷவிடம் விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.