வனிந்து கைகொடுக்க லக்னோவை ஐ.பி.எல். தொடரிலிருந்து வெளியேற்றியது பெங்களூர்

0
587

லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் புதன்கிழமை (25) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 நீக்கல் போட்டியில் 14 ஓட்டங்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் வெற்றியீட்டியது.

ரஜாத் பட்டிடார் குவித்த கன்னி சதமும் மிகவும் முக்கிய கடடங்களில் ஜொஷ் ஹேஸ்ல்வுட் வீழ்த்திய 3 விக்கெட்களும் வனிந்து ஹசரங்க டி சில்வா வீழ்த்திய ஒரு விக்கெட்டும்  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

ப்ளே ஓவ் சுற்றில் 208 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்து ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறியது.

மொஹமத் சிராஜ் வீசிய முதலாவது ஓவரின் கடைசி  பந்தில் அதிரடி வீரர் குவின்டன் டி கொக் (6) ஆட்டமி ழந்தமை லக்னோவுக்கு பேரிடியைக் கொடுத்தது. அவரைத் தொடர்ந்து மேனன் வோஹ்ரா 19 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அணித் தலைவர் கே.எல். ராகுல் தீப்பக் ஹூடாவும 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து அணியைப் பலப்படுத்த முயற்சித்தினர்.

ஆனால், அவர்கள் இருவரும் 94 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது வனிந்து ஹசரங்க டி சில்வாவின் பந்துவீச்சில் தீப்பக் ஹூடா (45) ஆட்டமிழந்தார்.

அதனைத் தோடர்ந்து மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (9) ஆட்டமிழந்தபோது 18 ஆவது ஓவரில் லக்னோவின் மொத்த எண்ணிக்கை 173 ஓட்டங்களாக இருந்தது.

தனி ஒருவராக போராடிய ராகுல் 5 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகள் அடங்கலாக 79 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஹேஸ்ல்வுடின் பந்துவீச்சில் களம் விட்டகன்றார். அத்துடன் லக்னோவின் வெற்றிக்கனவு அற்றுப்போனது.

பின்வரிசையில் துஷ்மன்த சமீர 4 பந்துகளில் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸ்ல்வுட் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 207 ஓட்டங்களைக் குவித்தது.

முதலாவது ஓவரில் ஆவேஷ் கானின் பந்துவீச்சில் அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் ஓட்டம பெறாமல் வெளியேறியதால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ஆட்டம் கண்டது.

ஆனால், விராத் கோஹ்லியும் ரஜாத் பட்டிடாரும் 2 ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலைக்கு நகர்த்தினர்.

கோஹ்லி (25), க்ளென் மெக்ஸ்வெல் (9), மஹிபால் லொம்ரோர் (14) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 14ஆவது ஓவரில் 115 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந் நிலையில் ரஜாத் பட்டிடாரும் தினேஷ் கார்த்திக்கும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 41 பந்துகளில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து எதிரணியை திக்குமுக்காட வைத்து பெங்களூரின் வெற்றியை உறுதிசெய்தனர்.

ரஜாத் பட்டிடார் 54 பந்துகளில் 12 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 112 ஓட்டங்களுடனும் தினேஷ் கார்த்திக் 5 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸ் உட்பட 37 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

லக்னோ பந்துவீச்சில் மோஷின் கான் மாத்திரமே திறமையாக பந்துவீசி 4 ஓவர்களில் 25 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற றேயால் செலஞ்சர்ஸ் பெங்களூர் நாளை நடைபெறவுள்ள 2 ஆவது தகதிகாண் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸை சந்திக்கவுள்ளது.