யாழில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு: யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு

0
128

தற்போதைய நெருக்கடி நிலையில் யாழ்.மாவட்டத்திற்கு தேவையான மண்ணெண்ணையின் அளவை விட அதிகளவு கொழும்பிலிருந்து தருவிக்கப்படுகின்ற போதிலும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காணப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது யாழ்.மாவட்டத்தில் உள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் பெறுவதில் உள்ள சிரம நிலை தொடர்பில் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் கடந்த மாதங்களை விட அதிகளவிலான மண்ணெண்ணெய் எம்மால் தருவிக்கப்படுகின்ற போதிலும் தற்போது உள்ள இடர்நிலையில் யாழ்.மாவட்டத்தில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவுகிறது.

கடந்த வாரத்தில் இருந்து யாழ்.மாவட்டத்திற்கு மண்ணெண்னை விநியோகம் இடம்பெறவில்லை. எனவே, பெருமளவில் பொதுமக்கள் மண்ணெண்ணெயினை கொள்வனவு செய்வதன் காரணமாகவும் தற்போது மண்ணெண்ணெய் பற்றாக்குறை நிலவுகின்றது.

இருப்பினும், ஏனைய டீசல், பெற்றோல் ஆகிய எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளவரை இவ்வாரம் சமாளிக்க முடியும். அதேவேளை, யாழில் உள்ள முக்கிய கூட்டுறவு சங்கங்களின் எரிபொருள் நிலையங்களின் ஊடக முக்கியமான அத்தியாவசிய தேவைக்குரிய எரிபொருள் வழங்கப்படவுள்ளது.

அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருள் விநியோக வலையமைப்பிற்கும், விநியோகத்திற்கும் மேலதிகமாக தான் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.