இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம்!

0
738

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் நடைபெறும் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த இந்திய தொடரின் போது முழங்கையில் காயம் அடைந்தார். அதற்காக அறுவை சிகிச்சை செய்த அவர் அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆடவில்லை. காயத்தில் இருந்து மீண்ட அவர் உள்ளூர் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சஸ்செக்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த நிலையில் 27 வயதான ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் காயத்தில் சிக்கி இருக்கிறார்.

அவருக்கு முதுகின் அடிப்பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் இந்த சீசனில் எஞ்சிய காலங்களில் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. அவர் காயத்தில் இருந்து மீண்டு எப்போது களம் திரும்புவார் என்பது குறித்து காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும், சிறப்பு மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு காயத்தில் இருந்து மீளுவதற்கான நிர்வாக திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மீண்டும் காயம் அடைந்து இருப்பதால் ஜூலை மாதம் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.