பொலிஸ் நியமனங்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

0
877

தற்போதைய அரசாங்க காலத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளில் 02 பேர் மாத்திரமே உரிய தகைமையை கொண்டிருப்பதாக பொலிஸ்மாஅதிபர் சி.டி.விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜென்ரல் ஜகத் அல்விஸ்க்கு அனுப்பபட்டுள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஆந்த ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், தற்போதைய அரசாங்கத்தினால் 184 பேர்   பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், 182 பேர் அரசியல் பலத்துடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த சூன்று மாதங்களுக்கு முன்னர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்ததாக பொலிஸ்மாஅதிபர் சி.டி.விக்ரமரத்ன தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில், கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்திற்கு பொலிஸ்மாஅதிபர் அழைக்கப்பட்டிருந்தார்

இந்த சந்திப்பில், தமது சொத்துக்கள் அழிவடைந்துள்ளதாகவும், அதனை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டு அமைச்சர்கள் கடுமையாக சாடியதாக பொலிஸ்மா அதிபர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் நியமிக்கப்படும் போது கவனிக்கப்படும் 9 காரணிகள் குறித்தும் பொலிஸ்மா அதிபர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு, உரிய காரணிகள் அடிப்படையில் அதிகாரிகள் நியமிக்கப்படாமை காரணமாக ஒட்டுமொத்த பொலிஸ் துறையும் விமர்சனங்களை ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸ்மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் நேர்முகத்தேர்வில் தோல்வியடைந்த மூன்று உத்தியோகஸ்தர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்க்பட்டுள்ளதாகவும் பொலிஸ்மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இவ்வாறு நியமிக்க்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களின் செயற்பாடுகளுக்கு இடையுறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜென்ரல் ஜகத் அல்விஸ்க்கு அனுப்பபட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.