எனக்கு இரண்டு வார கால அவகாசம் கொடுங்கள்! – ரணில்

0
999

இன்னும் இரண்டு வாரங்களில் அரசாங்க கட்சியை ஒரு நிலைப்பாட்டுக்கு கொண்டு வரமுடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கால அவகாசத்துள் ஆளும் மற்றும் எதிர்கட்சி என்ற இரண்டு தரப்பையும் ஒரு வழிப்படுத்தமுடியும் என்றும் ரணில் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே ரணில் விக்கிரமசிங்க இ்தனை தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஆளும் கட்சி ஆதரவு வழங்குவதாக கூறியபோதும், ஆளும் கட்சி இன்னும் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக பசில் ராஜபக்ச நேற்று காட்டிவிட்டதாக மரிக்கார் சுட்டிக்காட்டினார்.

எனவே ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சர்களை பாதுகாப்பதற்கே பிரதமராகியுள்ளார் என்று மரிக்கார் குற்றம் சுமத்தினார்.

எனினும் இதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க தாம் நாட்டுக்கு சேவை செய்யவே வந்துள்ளதாகவும் ராஜபக்சர்களை காப்பாற்ற வரவில்லை என்றும் குறிப்பிட்டார்.

விரைவில் நாட்டுக்கான பொருளாதார வேலைத்திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

தாம் கூறிய பின்னரே காலிமுகத்திடல் தாக்குதல் தொடர்பில் நேற்று இருவர் கைதுசெய்யப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தாம் சிறைக்கு செல்லும் வகையில் நித்திரைக்கு செல்லப்போவதில்லை என்று மகிந்தாநந்த அளுத்கமகே கூறியிருப்பாராக இருந்தால், தற்போது அவர் நித்திரையில்லாமல் 24 மணித்தியாலங்களும் சேவை செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ரணில் குறிப்பிட்டார்.