வவுனியாவில் களை கட்டிய வெசாக் கொண்டாட்டம்!

0
286

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் வெசாக் பண்டிகை வவுனியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

மே மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் புத்தரின் பிறப்பு மற்றும் பரிநிர்வாணம் என்பவற்றை நினைவுபடுத்தி வெசாக் தினம் பௌத்தர்களால் முக்கிய ஒரு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதற்கமைவாக வவுனியாவிலும் நகரப் பகுதியில் அமைந்துள்ள போதிதட்சனராமய விகாரையை மையமாக கொண்டு வெசாக் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

மாவட்ட செயலகம், பொலிஸ் நிலையம், அரச அலுவலகங்கள், நீதிமன்றம், சிறைச்சாலை என்பவற்றுக்கு முன்னால் வெசாக் கூடுகள் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா நகரிலும் பெளத்த கொடிகள் பறக்க விடப்பட்டு வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கண்டி வீதியில் அமைந்துள்ள போதிதட்சனராமய விகாரை மற்றும் அதன் முன்பாக வொசக் கூடுகள், புத்தரின் பரிநிர்வாண நிலைய வெளிப்படுத்தும் காட்சிகள் என்பன வைக்கப்பட்டுள்ளதுடன், வெசாக் வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. இதன் காரணமாக தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் அதிகளாவிலான மக்கள் சென்று வெசாக் கூடுகளையும், வெசாக் காட்சிகளையும் பார்வையிட்டு வருவதனை அவதானித்து வருகின்றனர்.

இதனால் வவுனியா நகரில் இருந்து போதிதட்சனராமய விகாரை வரையிலான ஏ9 வீதிப் பகுதி சன நெரிசல் மிக்கதாக காணப்படுவதுடன், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.