பாதுகாப்பு துப்பாக்கிகளை வழங்குமாறு எம்.பிக்கள் கோரிக்கை!

0
271

பாதுகாப்புக்காக தமக்கு துப்பாக்கிகளை வழங்குமாறு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எம்.பிக்கள் ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளுக்கு பின்னர், நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் , ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த, முன்னாள் அமைச்சர்களான நாமல், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகியோர் கலந்துகொள்ளாத நிலையில், முன்னாள் அமைச்சர் பெஷில் ராஜபக்ஸ கலந்துகொண்டதுடன், பொலிஸ்மா அதிபரும் இக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கூட்டத்தின் ஆரம்பத்திலேயே வன்முறைகளால் தமது வீடுகள், சொத்துகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஜனாதிபதியிடம் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ்மா அதிபரையே நேரடியாக குற்றஞ்சுமத்தியுள்ளதுடன், சிலர் தூசன வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளனர்.