முதல் கட்டமாக தமிழகத்தில் இருந்து அனுப்பிவைக்கப்படும் அத்தியாவசிய மருந்துகள்!

0
714

இலங்கைக்கு முதல்கட்டமாக அனுப்பத் திட்டமிட்டுள்ள அத்தியாவசிய மருந்துகளை தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன், நேற்று ஞாயிற்றுக்கிழமை, சென்னையில் உள்ள மருந்துக்களஞ்சியத்தில் வைத்து ஆய்வு செய்துள்ளார்.

28 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை, நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு அனுப்பி வைக்க தமிழக அரசாங்கம், கடந்த மாதம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது.

மொத்தம் 137 வகையான மருந்துகள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளன. இதில், முதல் கட்டமாக ரூ.8.87 கோடி மதிப்பிலான 55 மருந்துகளை தேர்வு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இலங்கையின் எந்தப் பகுதிக்கு பொருட்களை அனுப்புவது என்பதை மத்திய அரசாங்கமே முடிவு செய்யும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மாநிலத்தில் மூன்று மாதங்களுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் இருப்பு உள்ளதாகவும், மொத்தம் 240 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் 32 களஞ்சியங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சென்னையில் புதிய மருந்துக் களஞ்சியம் 35,000 சதுர அடியில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இது மாநிலத்தின் மிகப்பெரிய மருந்துக் களஞ்சியமாகும் என்றும் அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.