பிரதமரின் முக்கிய அறிவிப்பு! இதற்கு தடை இல்லை

0
1015

இலங்கையில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை. யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த உறவுகளுக்கு முழு உரிமை உண்டு. அதை எவரும் தடுக்கவே முடியாது.”என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

மேலும், நினைவேந்தல் நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் ஆத்மாவை வைத்து எவரும் அரசியல் செய்யக்கூடாது” எனவும் அவர் வலியுறுத்தினார்.

இறுதிக்கட்டப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ வாரம் தற்போது தமிழர் தாயகமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான மே 18ஆம் திகதி உணர்வெழுச்சியுடன் நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாட்டுக் குழுவினர் தயாராகி வருகின்றனர்.

இருப்பினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தலைமையிலான அரசு, கடந்த இரு வருடங்கள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதித்திருந்தது.

தமிழர் தாயகத்தின் பல இடங்களில் நீதிமன்றங்கள் ஊடாகப் இந்தத் தடை உத்தரவுகளைப் பொலிஸார் பெற்றிருந்தனர்.

இவ்வாறான நிலையில் இம்முறையும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடங்கல் எதுவும் ஏற்படுமா என்று புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஊடகங்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

“கடந்த நல்லாட்சியில் சகல நினைவேந்தல் நிகழ்வுகளையும் நடத்த நாம் அனுமதி வழங்கியிருந்தோம். அதேபோல் இனியும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்க நாம் அனுமதிக்கமாட்டோம். தெற்குக்கு ஒரு நீதி, வடக்குக்கு ஒரு நீதி என்று இருக்கக்கூடாது.

போரில் இறந்தவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்” என்று ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.