தாக்குதலில் முதல் குற்றவாளி முன்னாள் பிரதமர் – சீனிவாசன்

0
555

”அன்று தொட்டு இன்று வரை அமைதி வழிப் போராட்டங்களை வன்முறைகளாக மாற்றியவர்கள் சிங்கள ஆட்சியாளர்கள்தான்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஒரு மாத காலமாக கொழும்பு காலிமுகத்திடலில் மக்கள் அமைதியான முறையில் ஜனநாயக வழியில் உள்நாட்டையும் சர்வதேசத்தையும் ஈர்க்கத்தக்க வகையில் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்திற்கு பரவலாக மக்களின் ஆதரவு இருந்தது. மனித உரிமை அமைப்புகள், சட்டத்தரணிகள் சங்கம், அரச உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழகங்கள், சிவில் அமைப்புகள், மதத்தலைவர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சி அரசியலாளர்கள் என்று பலரும் ஆதரவளித்தனர்.

இப்படியான போராட்டத்தினை சர்வதேசத் தலைவர்கள், இராஜதந்திரிகளும் ஜனநாயக ரீதியான மக்களுக்கான உரிமை இதுவென்றனர்.

அப்படியிருக்க பிற மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குண்டர்கள் அலரிமாளிகைக் கூட்டமொன்றில் கலந்து கொண்டிருந்தார்கள். அக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மகிந்த, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் ஆகியோர் உரையாற்றியுள்ளனர்.

அதன் பின்னர் தான் அங்கு கலந்து கொண்டவர்கள் அலரி மாளிகைக்கு அண்மித்திருந்த மைனா கோ கம கூடாரங்களை அழித்ததோடு ஆரப்பாட்டக்காரர்களையும் தாக்கியுள்ளனர்.

அதனையடுத்து காலிமுகத்திடலுக்கும் சென்று அங்கும் கூடாரங்களை எரித்ததோடு ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியுள்ளனர்.

அமைதியாக வன்முறையில்லாமல் 30 நாட்கள் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை குண்டர்கள் ஒரு சில மணித்தியாலங்களில் வன்முறைக்களங்களாக மாற்றினர்.

அதிரடியான அந்தத் தாக்குதலுக்கு எதிரடியினைச் செய்வதற்காக அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பாக ஆயிரக்கணக்கான மக்கள் ஈடுபட்டனர்.

இன்று (11) காலை அறிந்த தகவலின் படி ஒன்பது பேர் உயிர் இழந்துள்ளளனர். அதில் பொலநறுவை நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக் கோறளயும் அடங்குவார். மேலும் 250 பேர் காயமடைந்துள்ளனர்.

88 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 38 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. சுமார் 104 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அலரிமாளிகையில் உரையாற்றிய அப்போதையப் பிரதமர் மகிந்த, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் உரைகளின் பின்னரே இந்த வன்முறைகள் வெடித்துள்ளன. இவர்கள் இந்த வன்முறையை திட்டமிட்டு நடத்தியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் மகிந்தவின் சகாக்களுடன் கையடக்கத் தொலைபேசியில் செல்பி படம் எடுத்துவிட்டு இறக்குமதி செய்யப்பட்ட காடையர்களை வன்முறையை ஏற்படுத்தும்படி அனுப்பியுள்ளனர்.

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிடுவது போல் ஆட்சியைப் பிடிப்பதற்கும் ஆட்சியைத் தொடர்வதற்கும் வன்முறைகள் என்பது ஆட்சியாளர்களின் சூழ்ச்சியாக இருப்பதைக் காண முடிகின்றது.

நாடு,மக்கள் எக்கேடு கெட்டாலும் தமது வர்க்கம் அதிகார நாற்காலியில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதே இலங்கை ஆட்சியாளர்களின் ஒரே இலக்காகவுள்ளது.   

பிலிப்பைன்சின் முன்னாள் பிரதமர் மார்கோஸ் தேர்தல் மோசடிகள் மூலமாக தொடர்ந்தும் அதிகார நாற்காலியில் இருந்தார். ஊழல் மோசடிகள் அவரது கைவந்த கலை. இறுதியாக 10 இலட்சம் மக்கள் அவரது அதிகார மாளிகையைச் சுற்றிச் சூழ்ந்ததும் விசேட வானவூர்தி மூலமாக குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார்.

சர்வாதிகாரி இடியமின் உகண்டாவில் படுமோசமான அநாகரிகமான ஆட்சியைச் செய்தான். இறுதியில் உகண்டாவில் இருக்க முடியாத நிலையில் சவூதி அரேபியாவில் தஞ்சமாகி அங்கே இறந்தான். இவையெல்லாம் எமது ஆட்சியாளர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். 

எதை விதைக்கிறோமோ அதனை அறுக்க வேண்டியே ஏற்படும். வன்முறைகளை விதைத்தால் அதற்கான விளைவும் வன்முறையான அறுவடையாகவே அமையும். லிபியத் தலைவர் கேணல் கடாபி எப்படித் தண்டிக்கப்பட்டார் என்பது அண்மைய சரித்திரமாகும். அபதந்திரம் தனக்கந்திரம் என்பது அர்த்தமான பொருள் பொதிந்த கருத்தாகும்.

நடைபெற்ற சம்பவங்களை வைத்து பார்க்கும் போது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய முதல் குற்றவாளி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தான் என்பது புலனாகின்றது” என தெரிவித்துள்ளார்.