முழு நாடும் ஸ்தம்பிக்கும் ஆபத்து

0
681

சுகாதார சேவைகள் இன்று நள்ளிரவு 12 மணி மற்றும் அனைத்து சுகாதார சேவைகளும் இன்று பிற்பகலில் இருந்து தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போவதாக சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம போராட்டகார்கள் மீதான வன்முறை தாக்குதல்களை கண்டித்து, அதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து கூட்டதாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே சாதாரண பொது மக்களின் அமைதியான போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிரிப்பு தெரிவித்து, நாளைய தினம் உடனடியாக தொழிற்சங்க போராட்டம் ஒன்றை அறிவிக்க போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

நாளை நடைபெறவுள்ள அவசர நிறைவேற்றுக்குழுவின் கூட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வது பற்றிய முடிவு எடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

இதனிடையே போராட்டகாரர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலை கண்டித்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எதிரில் தாதியர் உட்பட சுகாதார ஊழியர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுடன் அவர்கள் காலிமுகத் திடல் நோக்கி பேரணியாக புறப்பட்டு வந்துள்ளனர்.

அதேவேளை நாட்டின் அரச துறைசார்ந்த தொழிற்சங்கங்களும் பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் நாட்டின் செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பிக்கும் நிலைமை ஏற்படலாம் என கூறப்படுகிறது. கொழும்பில் இன்று மேற்கொள்ளப்பட்ட போராட்டகாரர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாடு முழுவதிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி, அரசாங்கம் உடன்டியாக பதவி விலக வேண்டும் என நாடு முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துக்கொண்டுள்ளவர்கள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.