இலங்கை நிலைக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம்

0
666

இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசாங்கத்தின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிராக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலிருந்தும் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையின் வன்முறைகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை, இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளன.

இலங்கையில் இடம்பெறும் அனைத்து வன்முறைகளையும் ஐக்கிய நாடுகள் சபை கண்டிப்பதாக ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் பொறுப்பு கூறவேண்டும் எனவும் ஹனா சிங்கர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு வன்முறை ஒருபோதும் தீர்வாக அமையாது என இலங்கைக்கான கனேடி உயர்ஸ்தானிகர் David McKinnon ருவிட்டரில் இதனை பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் இன்று அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது வன்முறையில் ஈடுபட்டவர்களை நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் கனேடி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக சுவிட்ஸர்லாந்தும் தெரிவித்துள்ளது. காலிமுகத்திடலில் வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யுமாறும் சுவிட்ஸர்லாந்து வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் இலங்கை பொலிஸ் மா அதிபர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில், நடத்தப்பட்ட வன்முறைகள் தொடர்பில் சிறிலங்கா அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரும் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை ராஜினாமா செய்வதன் ஊடாக நியாயப்படுத்த முடியாது என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.