உடன் நடைமுறையாகும் பாதுகாப்பு செயலாளரின் அறிவிப்பு

0
728

முப்படையினரினது விடுமுறைகளையும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கும் விடுமுறையும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விடுமுறை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமைதியைப் பேணுவதற்கு பொது மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன இலங்கை மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழல்நிலைக்கு மத்தியில் பொதுப் பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு உதவ முப்படைகளும் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அரசாங்கத்திற்கு அதிலும் குறிப்பாக மகிந்தவிற்கு ஆதரவாக அலரி மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் இடம்பெற்ற இடங்களுக்கு சென்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை தாக்கியிருந்தனர்.

இதனையடுத்து பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததுடன் கொழும்பு காலிமுகத்திடல் போராட்ட களம் உக்கிரமடைந்திருந்தது.

இந்த நிலையில் தற்போது பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அத்துடன், அசாதாரண நிலையை தொடர்ந்து கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று பிற்பகல் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு, மேல் மாகாணம் முழுவதும் விதிக்கப்பட்டு பின்னர் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

என்ற போதும் கொழும்பு காலிமுகத்திடல் பகுதி உட்பட கொழும்பின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பதற்ற நிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.