மே 06 ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஆதரவு!

0
149

மே 06 ஹர்த்தால் தினத்தன்று அனைத்து அதிபர், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்களும் சுகயீன விடுமுறையை அறிவித்து பாடசாலைகளை நடத்தாது தம் எதிர்ப்பினை வெளிப்படுத்தி அரச எதிர்ப்பு செயற்பாடுகளை உயர்ந்தபட்சம் முன்னெடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபொன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 6ம் திகதி வெள்ளிக்கிழமை எமது நாட்டின் பொருளாதாரத்தையும் சீரழித்து, நாட்டின் எதிர்காலத்தைப் பலிகொடுத்து, நாளைய சந்ததியினரையும் அழிவின் விளிம்பிற்கே கொண்டுவந்துள்ள ராஜபக்ச ஆட்சி உள்ளடங்களாக மக்களை வதைக்கும் அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டுமென அனைத்து அரச ஊழியர்கள் உட்பட, தனியார் மற்றும் அரசு ஆதிக்கம் உடைய நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஹர்த்தால் நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளனர்.

அதிகூடிய அரச ஊழியர்களாக உள்ள ஆசிரியர்கள் கடந்த 28ம் திகதி போராட்டத்திற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள்.

அதேபோன்று மே 06 ஹர்த்தால் தினத்தன்று அனைத்து அதிபர், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்களும் சுகயீன விடுமுறையை அறிவித்து பாடசாலைகளை நடத்தாது தம் எதிர்ப்பினை வெளிப்படுத்தி அரச எதிர்ப்பு செயற்பாடுகளை உயர்ந்தபட்சம் முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

அத்துடன் தத்தமது பிரதேசங்களில் இடம்பெறும் போராட்டங்களில் அனைத்து அதிபர், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் தவறாது கலந்துகொண்டு எமது பலத்தினை வெளிப்படுத்துவதோடு அரச எதிர்ப்பு பதாதைகளையும் காட்சிப்படுத்தி பொது உடைமைகள், தனியார் உடைமைகள் எதனையும் பாதிக்காத வகையில் இப்போராட்டத்தை முன்னெடுத்து எமது பலத்தினை வெளிப்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.

மேலும் ஊழல் மலிந்த அரசாங்கம் மக்கள் போராட்டத்தை அடக்குவதற்காக பல்வேறு சதித் திட்டங்களை கட்டவிழ்த்துவிடுவதோடு அரசாங்கத்தால் பயன்படுத்தியுள்ள ஆட்கள் உங்கள் போராட்டத்தின் மத்தியில் வந்து பல இடையூறுகளை விளைவிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கலாம்.

அதனால் அவ்வாறான வன்முறை முயற்சிகளுக்கு இரையாகாது மக்கள் போராட்டத்தை பாதுகாப்பான முறையில் முன்னெடுத்து, அரசாங்கத்தை விரட்டியடிக்கும் இப் போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்.

ஊழல் அற்ற மக்கள் நேயமுள்ள ஆட்சியை அமைக்கும் நோக்கிலான இவ் ஹர்த்தால் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் தலைமையில் முன்னெடுக்கப்படுவதோடு இப்பாரிய போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.