இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

0
597

இலங்கையில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் இன்றைய தினம் (03-05-2022) செயலிழந்துள்ள போதிலும், மின்துண்டிப்பு நீடிக்கப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த மின் பிறப்பாக்கி செயலிழந்துள்ளதால் தேசிய மின் கட்டமைப்பில் 270 மெகாவாட் மின்சார இழப்பு ஏற்படும் என்று மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. ஃபெர்டினாண்டோ கூறினார்.

எவ்வாறாயினும், டீசல் மற்றும் ஏனைய மின் உற்பத்தி நிலையங்களுக்கு உரிய நேரத்தில் எரிபொருள் கிடைப்பதால் மின்துண்டிப்பை நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.

நாளை புதன்கிழமை (04-05-2022) முதல் திட்டமிட்டபடி 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நுரைச் சோலை மின்நிலையத்தின் முதலாவது மின் பிறப்பாக்கியை 5 நாட்களுக்குள் புரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று காலை முதல் வழமை போன்று எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகிலுள்ள நீண்ட வரிசைகள் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் நிறைவடையும் என சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கொலன்னாவ எண்ணெய் சேமிப்பு முனையத்தில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இன்றைய தினம் வழமை போன்று எரிபொருள் விநியோக தாங்கி ஊர்திகளால் பெற்றுக்கொள்ள முடியாது போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருளை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்குவதே இதற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.