ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாரில்லை

0
296

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலகக் கூடாது என மக்கள் கோருகின்றனர் என்பதை நுகேகொடையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரனவின் மே தினக் கூட்டத்தின் மூலம் காணக் கூடியதாக இருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்களின் ஆணையில் வலுவான அரசாங்கத்தை அமைத்தது பதவி விலகி வீட்டுக்கு செல்வதற்காக அல்ல. இதற்கு முன்னரும் அரசாங்கம் பின்னடைவை சந்தித்ததுடன் மீண்டும் எழுச்சிப் பெற்று மக்களுக்கான சேவையில் இணைந்துக்கொண்டது.

ஜனாதிபதியோ, பிரதமரோ பதவி விலகி வீட்டுக்குச் செல்ல அரசாங்கம் இடமளிக்காது எனவும் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

நுகேகொடையில் நடைபெற்ற இந்த மே தினக் கூட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில் தொழிற்சங்கங்கள் ஒழுங்கு செய்திருந்தன.

எது எப்படி இருந்த போதிலும் 2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் நுகேகொடையில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துக்கொண்டனர்.

எனினும் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அந்தளவுக்கு மக்கள் பெருமளவில் கலந்துக்கொள்ளவில்லை.

இந்த நிலையில், நுகேகொடையில் நேற்று நடைபெற்ற கூட்டத்துடன் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தை ஒப்பிட்டுள்ள அரசியல் அவதானிகள் அன்று நடந்த கூட்டம் மகிந்த புயல் காற்று எனவும் தற்போது நடந்த கூட்டம் வெறும் மகிந்த காற்று மாத்திரமே எனவும் கூறியுள்ளனர்.