ஆர்ப்பாட்ட எச்சரிக்கை வெளியிட்ட அமெரிக்கத் தூதரகம்

0
375

கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்னதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஆர்ப்பாட்ட எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மே முதலாம் திகதியான நாளை கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் கொழும்பிற்கு பயணித்தல், கொழும்பில் இருந்து பயணித்தல், கொழும்பிற்குள் பயணித்தல் போன்ற அனைத்தையும் ஏனைய பயணங்களை மிகவும் கடினமாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாள் முழுவதும் வீதி மூடல் மற்றும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் என தூதரகம் தெரிவித்துள்ளது.

சில ஆர்ப்பாட்டங்கள் பற்றி அமெரிக்க தூதரகம் அறிந்திருப்பதாகவும், ஆனால் இலங்கை முழுவதும் மேலதிக போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளையதினம் கொழும்பின் பல பகுதிகளில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்கள் தொடர்பல் அமெரிக்க தூதரகம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய  கொழும்பு 6, லலித் அத்துலத்முதலி மைதானத்தில் பிற்பகல் 1:00 மணிக்கு ஆர்ப்பாட்டம். சுமார் 10,000 பேர் பங்கேற்பாளர்கள்.

கொழும்பு 7, விக்டோரியா பூங்காவில் காலை 9:30 மணிக்கு ஆர்ப்பாட்டம். சுமார் 5,000 பேர் பங்கேற்பாளர்கள்.

கொழும்பு 02, ஹைட் பார்க்கில் பிற்பகல் 2:00 மணிக்கு ஆர்ப்பாட்டம். 3,000 பங்கேற்பாளர்கள்.

கொழும்பு 02, ஸ்டென்லி ஜென்ஸ் மைதானத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆர்ப்பாட்டம். சுமார் 2,000 பங்கேற்பாளர்கள்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க அலுவலகத்தில் ஆரம்பமாகும் பேரணி 1,000 பங்கேற்பாளர்களுடன் கொள்ளுப்பிட்டி சந்தி நோக்கி வந்தடையும்.

ஏப்ரல் 26 ஆம் திகதி கண்டியில் ஆரம்பமான அணிவகுப்பு நாளை பிற்பகல் 3:00 மணிக்கு கொழும்பை வந்தடையும்.

கேம்பல் பூங்காவில் 15,000 பங்கேற்பாளர்களுடன் கூட்டம் நடைபெறும். அமைதியான முறையில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் கூட மோதலாக மாறி வன்முறையாக மாறக்கூடும் என்று தூதரகம் எச்சரித்துள்ளது.

போராட்டங்களை தவிர்க்குமாறு அமெரிக்க அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.