குற்றவாளியை கடுமையாகத் தாக்கிய இந்திய வம்சாவளி!

0
591

சிங்கப்பூரில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் குற்றவாளியை மது போதையில் கடுமையாகத் தாக்கி வாக்குமூலம் பெற முயன்ற இந்திய வம்சாவளி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவைச் சோ்ந்த சிவபாலன் என்ற இந்திய வம்சாவளி நபா் சிங்கப்பூரில் போதைப் பொருள்களுடன் கடந்த 2017-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா்.

அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 13 பிரம்படிகளும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

அண்மையில், கடுமையான உடல் வலி காரணமாக அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாகராஜன் என்ற இந்திய வம்சாவளி போதைப் பொருள் தடுப்பு அதிகாரி மது போதையில் சிவபாலனை வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தி கடுமையாக தாக்கியது தெரியவந்தது.

அதனைத் தொடா்ந்து நாகராஜன் கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, அவா் மீது சிங்கப்பூா் பொலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சலினா ஐசக், மூன்று குற்றங்களின் கீழ் நாகராஜன் குற்றவாளி என்று தீா்ப்பளித்து, அவருக்கான தண்டனை பின்னா் அறிவிக்கப்படும் என்று வழக்கை ஒத்திவைத்தாா்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொலீஸாா் ஒருவரிடம் தகாத வாா்த்தைகளைப் பயன்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக நாகாரஜன் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘நாகராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட குற்றவாளி சிவபாலனுக்கு ரூ. 2.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்படுகிறது.

மேலும், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக ரூ. 2.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.