உக்ரேனிய வீரர்களுக்கு உதவும் கனேடிய குடும்பம்!

0
474

கனடாவில் வசித்துவந்த உக்ரேனிய குடும்பம் ஒன்று தங்களின் வேலைகளை விட்டுவிட்டு, உக்ரேனிய வீரர்களுக்கு உதவும் பொருட்டு களமிறங்கியுள்ளனர்.

கனடாவில் வசித்து வந்த ஃபெசியாக் குடும்பமே, தங்களின் வேலையை விட்டுவிட்டு, இராணுவத்தினருக்கு உதவும் பொருட்டு, உக்ரைனுக்கு திரும்பியவர்கள். 54 வயதான அலெக்ஸ் ஃபெசியாக் விற்பனைத் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவரது காதலி நடால்கா உணவக உரிமையாளராக உள்ளார். ஒரே ஒரு மகள் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது இவர்கள் மூவரும் ஆளில்லா விமானங்களை இயக்கும் பணியிலும், பாதுகாப்பு உடைகளை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

2014 ம் ஆண்டு தனது மைத்துனர் ரஷ்ய பிரிவினைவாதிகளால் கொல்லப்பட்ட பின்னர் உக்ரேனிய இராணுவத்தில் தன்னார்வத் தொண்டு செய்யத் தொடங்கியதாக நடால்கா தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, கீவ் நகரில் தமக்கு சொந்தமான மூன்று உணவகங்களை மூடிய அவர், பெண்கள் இருவருடன் இணைந்து உக்ரைன் இராணுவத்திற்காக மோலோடோவ் காக்டெய்ல் கலவை செய்வதற்கும், முன் கள வீரர்களுக்கு உணவு மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

2014 வரையில் உக்ரைன் இராணுவம் கட்டுக்கோப்பாக இல்லை எனவும், அவர்களிடம் சீருடைகள் இல்லை, உணவு, வெடிமருந்துகள் இல்லை எனவும், ஒரு இராணுவத்திற்கான எந்த அடையாளமும் அவர்களிடம் இருந்ததில்லை என குறிப்பிட்டுள்ளார் நடால்கா.

ஆனால் தன்னார்வலர்களால் மட்டுமே தற்போதைய நிலைக்கு உக்ரைன் இராணுவம் வளர்ந்துள்ளதாக அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 2019ல் அலெக்ஸ் ஃபெசியாக்-ஐ முதல் முறையாக சந்தித்ததாக கூறும் நடால்கா, பின்னர் அவர் மீது காதல் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுவரையில் கனடாவில் வசித்து வந்த அலெக்ஸ் ஃபெசியாக், நீண்ட பல ஆண்டுகளுக்கு பின்னரே உக்ரைன் சென்றுள்ளார். தொடர்ந்து 2020 அக்டோபர் மாதம் கீவ் நகருக்கு குடிபெயர்ந்துள்ளார் அலெக்ஸ் ஃபெசியாக்.

இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுக்க, இராணுவத்தினரிடம் இருந்து உதவி கேட்டு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நிதி திரட்டும் பணியில் களமிறங்கிய நடால்கா, தற்போது வரையில் 85,000 டொலர் திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் இராணுவத்தின் முன் கள வீரர்களுக்காக அனைத்து உதவிகளும் தங்களால் இயன்ற வகையில் முன்னெடுத்து வருவதாக நடால்கா குறிப்பிட்டுள்ளார்.