“பிரதமராக மஹிந்த பதவியில் தொடர்வார்” – அரச தலைவர் அறிவிப்பு

0
373

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு எந்த அறிவித்தலையும் தான் வழங்கவில்லை எனவும் அவ்வாறான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகிய கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு கடிதம் அனுப்பியிருந்த நிலையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி குழுவினர் நேற்று ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் கூடியுள்ளனர். இதன் போது தவறான கருத்துக்கள் பரப்புவதை தடுக்க வேண்டும். அத்துடன் கட்சியை பிளவுபடுத்துவதை தான் எதிர்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெளிவுபடுத்திய போதிலும் இறுதித் தீர்மானம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது அடுத்த பிரதமர் யார் என்பது தொடர்பில் தொடர்ந்து கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துக்கள் கூறப்பட்டுள்ள நிலலையில், “பிரதமரும் நானும் சகோதரர்கள் என்பதால் யாராலும் பிரிக்க முடியாது” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டாம் என அரசாங்கத்தின் மேலும் இரண்டு பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால், தாமரை மொட்டு கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் எதிர்க்கட்சியில் இணைந்து நாமல் ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக இருவரும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.