பிரதமர் மஹிந்த ராஜபக்ச எந்தச் சந்தர்ப்பத்திலும் பதவி விலகமாட்டார் – ரத்நாயக்க எம்.பி

0
213

“எமது தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச எந்தச் சந்தர்ப்பத்திலும் பதவி விலகமாட்டார்.” இவ்வாறு முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.

பிரதமரைப் பதவி விலகக் கோரும் சுயாதீன எம்.பிக்கள், தேர்தல் மேடைகளில் அவரின் படத்தை ஏந்தியவாறு பிரசாரம் செய்துதான் வெற்றியடைந்தார்கள் என்பதை மறக்கக்கூடாது எனவும் அவர் நினைவுபடுத்தினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதேச சபைத் தவிசாளர்கள், நகர சபைத் தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரத்நாயக்க எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்துவதில் சிலர் குறியாகவுள்ளனர். அவர்களின் சுயலாப அரசியல் எளிதில் எடுபடாது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலிருந்து எவர் வெளியேறினாலும் எமது கட்சி பலம் இழக்காது.

எமது தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கைகளை நாம் தொடர்ந்து பலப்படுத்துவோம். அவரைப் பதவி விலகக் கோர எவருக்கும் உரிமை இல்லை. கொடிய பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்ட ஒரே தலைவர் மஹிந்த ராஜ்பக்சவே” – என்றார்.