ஹைதராபாத்தை வீழ்த்தியது குஜராத்

0
543

ஐபிஎல் 2022-ன் இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், குஜராத் டைட்டான்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டி மும்பை வான்கடேவில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. 

டாஸ் வென்ற குஜராத் அணி வழக்கம்போல் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சனும், அபிஷேக் ஷர்மாவும் தொடக்கம் தந்தனர். 

முதல் ஓவரை முகமது ஷமி மிகவும் கட்டுக்கோப்பாக வீசினார். யாஷ் தயால் வீசிய இரண்டாவது ஓவரின் நான்கு மற்றும் ஐந்தாவது பந்துகளில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து அசத்தினார். 

மூன்றாவது ஓவரை வீசிய முகமது ஷமி கேன் வில்லியம்சனை 5 ரன்களில் வெளியேற்றி ஹைதராபாத் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து ராகுல் திரிபாதி களம் இறங்கினார். 

ஷமி வீசிய 5ஆவது ஓவரை எதிர்கொண்ட ராகுல் திரிபாதி ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளை தொடர்ச்சியாக அடித்தார். நிலைத்து நின்று ஆடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அதே ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் அந்த அணி 44/2 என்ற இக்கட்டான சூழலில் தத்தளித்தது. 

அதனை அடுத்து மார்க்ரம் களம் இறங்கினார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததால் அபிஷேக் ஷர்மா – மார்க்ரம் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. 

குறிப்பாக அபிஷேக் ஷர்மா அதிரடியாக ஆடி நடப்பு ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது அரை சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அபிஷேக் ஷர்மா 42 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து 16ஆவது ஓவரில் ஜோசப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 3 ரன்களில் ஷமி பந்துவீச்சில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்தாலும் மார்க்ரம் தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடி 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது அவருக்கு ஐபிஎல் தொடரில் மூன்றாவது அரைசதம் ஆகும். 

தொடர்ந்து அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்த்திருந்த சூழலில் 40 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து தயாள் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி நேரத்தில் ஸ்கோரை உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் மூன்று ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். 

அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஜேன்சனும், ஷாஷாங்கும் கடைசி ஓவரில் அதிரடியாக ஆடினர். ஃபெர்குசன் வீசிய கடைசி ஓவரில் ஷாஷாங்க் மூன்று சிக்சர்களும், ஜேன்சன் ஒரு சிக்சரும் அடித்தனர். அடித்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. 

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டான்ஸ் அணிக்கு சுப்மன் கில்லும், சஹாவும் தொடக்கம் தந்தனர். ஜேன்சன் வீசிய இரண்டாவது ஓவரில் சஹா ஒரு பவுண்டரியும், சிக்சரும் அடுத்தடுத்து விளாசினார். 

தொடர்ந்து அதிரடி காட்டிய கில்  – சஹா ஜோடி ஹைதராபாத் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு தேவையான நேரத்தில் பவுண்டரிகளை விளாசியது. இதனால் குஜராத் அணி பவர் ப்ளே முடிவில் 59 ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருந்தது. 

இந்தச் சூழலில் 8ஆவது ஓவரை வீசிய உம்ரான் மாலிக்கிடம் சுப்மன் கில் 22 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா வந்த வேகத்தில் 10 ரன்கள் எடுத்து உம்ரான் மாலிக்கிடம் வீழ்ந்தார். அவருக்கு அடுத்து களமிறங்கிய மில்லர் சஹாவுடன் ஜோடி சேர்ந்தார்.

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததால் நிதானமாக ஆட ஆரம்பித்த சஹா 28 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து ஆடிய சஹா – மில்லர் ஜோடியை உம்ரான் மாலிக் 14ஆவது ஓவரில் பிரித்தார். அந்த ஓவரில் சஹா 68 ரன்களில் ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து 16ஆவது ஓவரை வீசிய மாலிக் மில்லரையும் 17 ரன்களில் ஆட்டமிழக்க செய்தார். இதனால் 25 பந்துகளுக்கு 57 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலைக்கு குஜராத் தள்ளப்பட்டது. அடுத்து களமிறங்கிய அபினவ் மனோகரையும் உமரான் மாலிக் வீழ்த்தியதை அடுத்து அவர் தனது முதல் ஐந்து விக்கெட் ஹாலை பதிவு செய்தார். 

கடைசி இரண்டு ஓவர்களில் 35 ரன்கள் தேவைப்பட்ட சூழலில் தெவாட்டியாவும், ரஷித் கானும் ஜோடி சேர்ந்து கடுமையாக போராடினர். ஆட்டத்தின் 19ஆவது ஓவரில் ராகுல் தெவாட்டியா ஒரு சிக்ஸ் அடித்து ஆட்டத்தில் பரபரப்பை கூட்டினார். 

இந்தச் சூழலில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. 20ஆவது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் ராகுல் தெவாட்டியாவும், ரஷித் கானும் தலா ஒரு சிக்சர் அடிக்க கடைசி மூன்று பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது.