தனியொரு குடும்பமே இலங்கையை அழித்துவிட்டது – அமெரிக்காவில் விசாரணை

0
534

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் வங்குரோத்து நிலைமை குறித்து தான் அறிந்துள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஸ்டீவன் கோர்ஸ்போர்ட் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களை சமீபத்தில் சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். 

தனியொரு குடும்பமே அதற்கு காரணம் என தான் அறிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் சொத்துக்களை அபகரித்ததன் மூலம் தற்போதைய நிலை உருவாவதற்கு யார் காரணம் என்பதுகுறித்து காங்கிரஸ் விசாரணைகளிற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

அவ்வாறான விசாரணைகளை அமெரிக்காவின் நியாயாதிக்க எல்லைக்குள் முன்னெடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகார குழுவிற்கு தலைமை தாங்கும் கிரகரி மீக்ஸ் உடன் இணைந்து விசாரணைகளிற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்போவதாக ஸ்டீவன் கோர்ஸ்போர்ட் தெரிவித்துள்ளார். 

நெவடாவின் லாஸ்வெகாசில் இலங்கையர்களின் நிதிதிரட்டும் நடவடிக்கைகளில் கலந்துகொண்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இலங்கையின் சொத்துக்களை அபகரித்த இலங்கை அரசாங்கத்தின் ஒரு பகுதியாக விளங்கும் அமெரிக்க பிரஜைகள் குறித்து காங்கிரஸ் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் தற்போதைய நிலையில் அந்த நாடு வங்குரோத்து நிலையையும் நிதிவீழ்ச்சியையும் எதிர்கொள்கின்றது -இதற்கு நாட்டை ஆளும் தனியொரு குடும்பமே காரணம் அமெரிக்க தலைமைக்கும் இது தெரிந்திருக்கின்றது என என்னால் உறுதியளிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் வளங்களை அபகரித்தவர்களை பகிரங்கப்படுத்துவதற்கு அமெரிக்ககாங்கிரசுடன் இணைந்து பணியாற்ற முடியும் என நம்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.