இன்றைய தினம் ஊடகவியலாளர் சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம்!

0
451

வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மாமனிதர் தராக்கி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் ஊடக அமையத்தின் தலைவர் எம்.ஜி. ரெட்ணகாந்தன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.

அமையத்தின் செயலாளர் என்.ஜனகதீபன் இன்றையதினம் மாலை 5.30 மணியளவில் முதற்சுடரினை ஏற்றி மலர் வணக்கத்தினை ஆரம்பித்து வைத்ததுடன், ஏனைய ஊடகவியலாளர்களும் மெழுகுதிரி ஏற்றி மலர் வணக்கத்தினை செலுத்தியிருந்தனர்.

இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான சிவராம் படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துவிட்டன.

பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 28, 2005 ஆம் ஆண்டில் பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில் நாடாளுமன்றத்திற்கு அருகில் வைத்துக் கடத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இலங்கையில் நிலவும் கொடூரமான ஊடக – கருத்துச் சுதந்திர மறுப்பு சூழலைக் காட்டும் சிவராமின் படுகொலை நடந்து பல வருடங்கள் கடந்தபோதும் இதுவரையில் நிமலராஜன் முதல் சிவராம் உட்பட அவரின் பின்பும் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் கொலைகளுக்குப் பொறுப்பான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1959 ஆகஸ்ட் 11 மட்டக்களப்பில் பிறந்த சிவராம் தராகி என்ற பெயரில் த ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையில் 1989 இல் தன் முதல் கட்டுரையை எழுதினார்.

அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த அவரது கட்டுரைகள் உள் நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவலாக வாசிக்கப்பட்டன.

பத்திரிகை எழுத்தாளராக அரசியல் ஆய்வாளராக படைத்துறை ஆய்வாளராக பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருந்ததுடன், தமிழ்த் தேசியம் சார்ந்து ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிவந்த சிவராம் பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்ப்புக்களையும் கடந்தே எழுதிவந்த அவர் இறுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதே தினத்தில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு 17 வருடங்களாகியும் சிவராமின் படுகொலையுடன் தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி நிலை நாட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.