முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள்!

0
361

நாட்டில் இன ஐக்கியம் உருவாகியுள்ளதாக இருக்குமேயானால் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள முஸ்லிம் மக்களும் கலந்துகொள்ள வேண்டுமென வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று (27.04.2022) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல் நிலைமைக்கு காரணமான ஆட்சியாளர்களை வீட்டுக்கு செல் என காலிமுகத்திடல் தொடக்கம் நாடு பூராகவும் போராட்டம் இடம்பெறுகின்றது.

இந்த போராட்டங்கள் ஜனநாயகரீதியான போராட்டம் என்பதால் எவரையும் கைது செய்யவில்லை. அந்த வகையில் நாமும் இதனை வரவேற்பதோடு போராட்டத்திற்கான ஆதரவை தெரிவிக்கின்றோம்.

அத்துடன் ஜனநாயக ரீதியான இப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு யுத்தகாலத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதனை சகோதர சிங்கள மக்களும் தெரிவித்து வருகின்றனர்.

இது இந்த நாட்டில் ஏற்பட்ட பாரிய மாற்றமாகும். இந்நிலையில் தமிழ் மக்களின் மனங்களில் புரையோடிப்போயுள்ள யுத்த வலிகளை நினைவுகூர்ந்து யுத்தத்தால் மரணித்த தமிழர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் கலந்துகொண்டு அம் மக்களுக்காக அஞ்சலி செலுத்த அழைத்து நிற்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.