பாகிஸ்தானில் ஆசிரியை தற்கொலைப்படை தாக்குதல்

0
555

பாகிஸ்தானில் பல்கலைக்கழக வாசல் அருகே பெண் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 3 சீனர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு செயல்படுகிறது. இந்த கிளர்ச்சியாளர்களை பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகள் என அறிவித்துள்ளது.

இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்பிற்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பலுசிஸ்தான் விடுதலை ராணுவ கிளர்ச்சி அமைப்பு அவ்வப்போது தற்கொலைப்படை தாக்குதல்களையும் அரங்கேற்றி வருகிறது.

இதற்கிடையில், அந்நாட்டின் சிந்து மாகாணம் கராச்சி நகரில் கராச்சி பல்கலைக்கழகம் உள்ளது. அந்த பல்கலைக்கழக வளாகத்தில் சீன மொழி பயிற்றுவிக்கும் கன்பூசியஸ் என்ற கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தில் சீனாவை சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த கல்வி மையத்திற்கு நேற்று காரில் சீன ஆசிரியர்கள் சிலர் வந்தனர். அப்போது, கல்வி மையத்தின் வாசல் அருகே பர்தா அணிந்திருந்து நின்றுகொண்டிருந்த பெண் கார் வந்ததும் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்தார்.

இந்த தற்கொலைபடை தாக்குதலில் சீனாவை சேர்ந்த 3 பேர் மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பெண் என மொத்தம் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள பலுசிஸ்தான் விடுதலை ராணுவ அமைப்பு தாக்குதலை நடத்தியது யார் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பெண் 30 வயதான ஷரி பலோச் என்ற பரம்ஷா. பிஎச்டி பயின்று வரும் பரம்ஷா விலங்கியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

இவர் அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறது. இவரது கணவர் டாக்டராக உள்ளார். பரம்ஷாவுக்கு 2 குழந்தைகள் உள்ளன. பர்ம்ஷா பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் மஜித் பிரிவில் சேர்ந்தார்.

2 குழந்தைகள் உள்ளதால் தற்கொலைப்படை தாக்குதல் பிரிவான மஜித்தில் இருந்து விலகிக்கொள்ளும்படி பர்ம்ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதை நிராகரித்த பர்ம்ஷா தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினார்.

மஜித் பிரிவு தொடர்ந்து சீனர்களை குறிவைத்து தொடர்ந்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும்’என தெரிவித்துள்ளது. பலுசிஸ்தான் விடுதலை ராணுவ அமைப்பை சேர்ந்த பெண் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது இதுவே முதல்முறை என்ற தகவல் வெளியாகியுள்ளது.  

Gallery