வவுனியா மாவட்டத்தின் குளங்களில் ஒரு விதமான பச்சைத்தாவரம்: பாதிப்படையும் விவசாய நடவடிக்கை

0
342

வவுனியா மாவட்டத்தின் குளங்களில் தற்போது பரவி வருகின்ற ஒரு விதமான பச்சை தாவரத்தின் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைந்து வருகின்றது.

குளத்தின் நீர் ஏந்து பகுதிகளில் இத்தாவரமானது படர்ந்து காணப்படுவதனால், குளங்களில் உள்ள நீரின் கொள்ளளவு குறைவதுடன், இந்த குளத்திலிருந்து நீர்ப்பாசனம் செய்யப்படுகின்ற வயல் நிலங்களும் பாதிப்படைந்துள்ளது.

விவசாய நிலங்களுக்கு இந்த குளத்தின் நீரைப் பாய்ச்சுகின்ற போது இத் தாவரம் நெற் பயிர்ச்செய்கை செய்கின்ற வயல் நிலங்களுக்கும் சென்று, அங்குள்ள நெற்பயிர்களையும் பாதிப்படையச் செய்கின்றது.

அத்தோடு பயிர்களுடைய வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதோடு, விளைச்சலையும் குன்ற செய்வதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். வவுனியா மாவட்டத்தில் இப்பிரச்சனை பல குளங்களில் ஏற்படுவதோடு, இத்தாவரமானது பரவலடைவது அதிகரித்து வருவதனையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறு குளத்தின் நீரேந்து பகுதிகளில் இத்தாவரமானது பரவலடைந்து வருவதனால் தமது நடவடிக்கைகள் முற்றாகப் பாதிப்படையக்கூடும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதற்கு நீர்ப்பாசன திணைக்களம் அல்லது உரிய அதிகாரிகள் இதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுகின்றனர்.

இவ் ஆகாயத்தாமரையானது வவுனியாவிலுள்ள கூடுதலான குளங்களில் அதாவது வவுனியா குளம், பண்டாரிக்குளம், வைரவ புளியங்குளம், வேப்பங்குளம், நெளுக்குளம், பத்தினியார்மகிழங்குளம் போன்ற குளங்களில் படர்ந்து காணப்படுகின்றமையை காணக்கூடியதாக உள்ளது.