நாட்டை விட்டு தப்பி செல்ல முயலும் அரசியல்வாதிகள்!

0
360

இலங்கையில் மோசடி குற்றச்சாட்டுக்களில் சமந்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், அவர்களின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்து உத்தரவுகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபரிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.    

இந்த கோரிக்கை தொடர்பில் சட்ட மா அதிபர் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இது தொடர்பில் சட்டத்தரணிகள் குழுவொன்று நேற்று (26-04-2022) முற்பகல் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் வைத்து சட்ட மா அதிபரை சந்தித்து இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

இந்த சந்திப்பு தொடர்பில், சட்டத்தரணிகள் குழாமில் அங்கம் வகித்த சட்டத்தரணி சுனில் வட்டகல கருத்து தெரிவிக்கையில்,

 ‘மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுக்கும் மற்றும் மேல் நீதிமன்றங்களில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகள், நாட்டில் நிலவும் நெருக்கடி சூழலில் நட்டை விட்டு தப்பிச் செல்ல முற்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அவ்வாறு அவர்கள் தப்பிச் சென்றால், குறித்த வழக்குகளை முன்னெடுத்து செல்வதற்கு தடைகள் ஏற்படுவதுடன், அவ்வாறு நிகழ்ந்தால் அவர்கள் மோசடி செய்த அரச பணம், சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் சாத்தியமற்றுப் போகலாம்.

எனவே தான் அவ்வாறான குற்றச்சாட்டுக்களை உடைய, அரசியல்வாதிகளுக்கு எதிராக நாட்டை விட்டு வெளியேற தடை உத்தரவுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சட்ட மா அதிபரிடம் கோரிக்கை முன் வைத்தோம்.