நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

0
329

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு முன்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சரவையின் அதிகாரங்கள் அரச தலைவரிடம் கைமாற்றப்படும் என்பதால் நாட்டில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நம்பிக்கையில்லாப் பிரேரணை திட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளும் இணக்கமாக செயற்பட வேண்டும் என காரியவசம் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் தற்போதைய பிரதமருக்குப் பதிலாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவிக்கு வரக்கூடாது என்றும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தமது இணக்கத்தை வெளியிட்டிருக்கவில்லை.