ஊட்டச்சத்து குறைபாடுள்ள சமூகம் உருவாகும் அபாயம்!

0
352

நாட்டில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் வாழ்க்கைச் செலவுகள் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்து போசாக்குக் குறைபாடுள்ள சமூகம் உருவாகுவதை தவிர்க்க முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழு வைத்தியசாலை அமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோயாளிகள் மாதத்திற்கு ஒருமுறை கிளினிக்குகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டாலும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையே கிளினிக்குகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்குவதில் பெற்றோர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும், நாளாந்த சம்பளம் பெறுபவர்கள் பணவீக்கத்துடன் வாழ்வது கடினமாகிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி அரசியலில் இருந்து விலகி தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கான நிலையான வேலைத்திட்டத்தை அரசாங்கமும் சட்ட சபையும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கலாநிதி செனல் பெர்னாண்டோ தெரிவித்தார்.