யாழ்.பொது நூலகம் மற்றும் பல்கலைக்கழகத்துக்கு சென்ற அமெரிக்க தூதுவர்!

0
27

யாழ். பொது நூலகத்திற்கு இன்றையதினம் விஜயம் செய்த அமெரிக்கத் தூதர் ஜுலி சுங் சிறிது நேரம் மின்சாரம் இல்லாத நிலையில் பொது நூலகத்தைப் பார்வையிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யாழ். பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

யாழ். பொது நூலகத்தில் இருக்கும் மின்பிறப்பாக்கி திடீரென இயங்காத காரணத்தினால் தூதுவர் குழு சிறிது நேரம் மின்சாரம் இன்றிப் பொது நூலகத்தைப் பார்வையிட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது.

பின்னர் மின்சார சபை ஊழியர்களின் உதவியுடன் மின்பிறப்பாக்கி சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் யாழ். மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது மின்பிறப்பாக்கி இயங்காதது உண்மைதான், ஆனால் அது உடனடியாக சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது என தெரிவித்தார்.

அத்துடன் அவர் இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின்போது, யூ.எஸ். எயிட் அனுசரணையுடன் யாழ். பல்கலைக்கழக உயர்பட்டப் படிப்புகள் பீடத்தால் நடத்தப்படும் சமாதானமும், முரண்பாடுகளுக்கான தீர்வுகளும் என்ற முதுமாணிக் கற்கை நெறிக்கான அனுசரணையாளர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

அமெரிக்கத் தூதுவர் முன்னிலையில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரும், யூ.எஸ். எயிட் நிறுவன அதிகாரிகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இதன்போது, பல்கலைக்கழகப் பதிவாளர், நிதியாளர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், யூ.எஸ். எயிட் நிறுவன அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.