வெளிநாடொன்றில் தமிழ் இளைஞனுக்கு நாளை மரணதண்டனை; பெரும் தவிப்பில் குடும்பம்!

0
39

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் இளைஞரான தர்மலிங்கம் நாகேந்திரன், நாளை புதன்கிழமை 27ஆம் திகதி தூக்கிலிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாகேந்திரன் தொடர்பில் அவரது தாயார் புதிய வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாகவும், அதன் மீதான விசாரணை இன்று நடைபெறுவதாகவும் நாகேந்திரனின் சகோதரி ஊடகத்திடம் தெரிவித்தார்.

42.7கிராம் ஹெராயின் போதைப் பொருளை சிங்கப்பூருக்குள் கடத்தி வந்த குற்றச்சாட்டின் பேரில் 2009ஆம் ஆண்டு நாகேந்திரன் கைதுசெய்யப்பட்டார்.

அப்போது அவருக்கு வயது 21. அதைத்தொடர்ந்து பத்து ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் அவருக்கு 2019ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் நாகேந்திரனுக்கு இலேசான அறிவுசார் மாற்றுத்திறன் (Intellectual Disability) இருப்பதுடன், அவரது IQ அளவானது 69 புள்ளிகள் மட்டுமே உள்ளதாகவும், அவர் நுண்ணறிவு குறைபாடு உள்ளவர் என்பதுடன் இதுவும் ஒரு வகையான ஊனம் என்று வாதிட்ட நாகேந்திரன் தரப்பினர், இத்தகைய குறைபாடு உள்ளவர்களை தூக்கிலிடக்கூடாது என்று வலிறுத்தினர்.

எனினும் நாகேந்திரனது மரண தண்டனையை நிறைவேற்றுவதில் எவ்வித மாற்றமும் இல்லை என சிங்கப்பூர் நீதிமன்றம் தெரிவித்ததுடன், நவம்பர் 2021 10ம் திகதி நாகேந்திரன் தூக்கிலிடப்படுவார் என அறிவித்தது.

ஆனால் இறுதிநேரத்தில் அவருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதால், தூக்குத்தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாகேந்திரன் நாளை புதன்கிழமை தூக்கிலிடப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாகேந்திரனின் வழக்கைக் கையாண்ட தலைமை நீதிபதிக்கெதிராக நாகேந்திரனின் தாயார் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ள நிலையில் இதன் மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக நாகேந்திரனின் சகோதரி சர்மிளா தெரிவித்தார்.

அதேநேரம் நாகேந்திரனின் ஆரம்பகால வாழ்க்கை தொடர்பில் சர்மிளாவிடம் கேட்டபோது, தனது சகோதரன் சிறுவயது முதலே மிகவும் அன்பானவர் எனவும் தாயாருடன் இணைந்து குடும்பப்பாரத்தை ஏற்றுக்கொண்டவர் எனவும் தெரிவித்தார்.

கடன் விவகாரம் ஒன்றின் அடிப்படையில் இடம்பெற்ற பழிவாங்கல் காரணமாக நாகேந்திரன் இதில் சிக்கிக்கொண்டதாக நகேந்திரனின் வழக்கறிஞர் ரவி அவர்கள் தெரிவித்தார்.