ராஜபக்ச குடும்பத்தினரிடம் இருந்து முதலீடுகள் எதனையும் பெறவில்லை! உகண்டா நிறுவனம் அறிவிப்பு!

0
357

இலங்கையின் ராஜபக்ச குடும்பத்தினரிடம் இருந்தோ அல்லது அந்த நாட்டின் அரசியல்வாதிகளிடம் இருந்தோ, முதலீடுகள் எதனையும் பெறவில்லை எனறு உகண்டாவின் செரினிட்டி குழுமம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் செரினிட்டி குழுமம், நேற்று ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டது,

அதன் நிறுவனர்கள், செயல்பாடுகள் மற்றும் வணிக விவரங்கள் குறித்து சமூக ஊடகங்களில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இதில் குழுமம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் ராஜபக்ச குடும்பத்துடன் தமது நிறுவனத்தின் வணிக முயற்சியை இணைக்கும் கருத்துப்பகிர்வுகளை அடுத்து, இலங்கையின் பொது மக்களிடையே தவறான கருத்துக்கள் தோன்றியுள்ளன

எனவே இந்த கருத்துக்களில் இருந்து தமது பெயரை நீக்குவதற்கு செரினிட்டி குழுமம், சட்ட ஆலோசனையை நாடியுள்ளது.

உகண்டாவில் உள்ள செரினிட்டி குழுமத்தின் நிறுவனங்களில் இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் பகிர்வுகள் இடப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் பல இலங்கையர்கள் மற்றும் உகண்டா நாட்டவர்களுக்கு தமது நிறுவனம் வேலைவாய்ப்பை வழங்கியது.

அத்துடன் நாட்டிற்கு நிலையான வெளிநாட்டு பணம் அனுப்புவதன் மூலம் தமது நிறுவனம் பெருமையுடன் தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவளிக்கும் என்றும் செரினிட்டி குழுமம் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பணிப்பாளர்களான ருவன் ஜயரத்ன மற்றும் தேவக ஏகநாயக்க ஆகியோரின் வர்த்தக ஆர்வத்தின் அடிப்படையில் செரனிட்டி குழுமம் – உகண்டாவில் ஸ்தாபிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உகண்டாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நிறுவனத்துக்கு சென்றிருந்தார்.