மின்சார ஸ்கூட்டா்களைத் திரும்பப் பெறும் ஓலா நிறுவனம்!

0
474

மின்சார ஸ்கூட்டா் தீப்பிடித்த சம்பவங்களைத் தொடா்ந்து, பரிசோதனைப் பணிகளுக்காக தங்கள் நிறுவனத்தின் 1,441 ஸ்கூட்டா்களை ஓலா எலெக்ட்ரிக் திரும்பப் பெறவுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார ஸ்கூட்டா்கள் தீப்பிடித்த சம்பவங்கள் நடைபெற்றதாக செய்திகள் வந்த நிலையில் ஓலா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

மின்சார ஸ்கூட்டா் தொடா்பான பேட்டரி வெடித்தல், தீப்பிடித்தல் தொடா்பான வெவ்வேறு விபத்துகளில் இதுவரை 4 போ் உயிரிழந்ததாகத் தெரிகிறது.

கடந்த மாா்ச் மாதம், மகாராஷ்டிர மாநிலம் புணேயில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ வகை மின்சார ஸ்கூட்டா் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதுபோன்ற சம்பவங்களைத் தொடா்ந்து, குறைபாடுள்ள மின்சார ஸ்கூட்டா்களைத் திரும்பப் பெற விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்த வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி (Nitin Gadkari)அண்மையில் வலியுறுத்தியிருந்தாா்.

இந்நிலையில், தனது நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ வகையைச் சோ்ந்த 1,441 ஸ்கூட்டா்களைத் திரும்பப் பெறுவதாக ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்துள்ளது.

அந்த வாகனங்களை தனது நிறுவனத்தின் பொறியாளா்கள் ஆய்வு செய்து, அவற்றின் பேட்டரி சாதனங்கள், வெப்பம் சாா்ந்த உதிரிபாகங்கள், பாதுகாப்பு சாதனங்களை முழுமையாகப் பரிசோதிப்பா் என்று ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்துள்ளது.