பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்கள் எதிர் நோக்கியுள்ள பேரிடர்!

0
25

நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோர் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேல் மாகாணத்தில் இந்த வீதம் 30 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் நிபுணர் மருத்துவர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளமையினால் இதய நோய்கள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பலர் தங்கள் அன்றாட  நடவடிக்கைகளை தவிர்த்து கடுமையான வெயிலில் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. வரிசையில் நின்றும் சில சமயங்களில் வெறுங்கையுடன் வீடு திரும்ப வேண்டியுள்ளது.

கையில் பணப் பற்றாக்குறையும், பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவைகள் மன அழுத்தம் அதிகரிப்பதற்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகரித்த மன அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த சர்க்கரை உட்பட மற்ற தொற்று அல்லாத நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது திடீர் ஏற்படும் மாரடைப்புகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறைந்த மட்டத்தில் உள்ளன. ஆனால் எதிர்காலத்தில் இந்த மருந்து முடிந்து விட்டால் மருத்துவமனை ஊழியர்களும் நோயாளர்களும் பாரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் எனவும் வைத்தியர் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார்.