ஜனாதிபதியின் கீழ் எந்த அமைச்சு பதவியையும் ஏற்க போவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி முடிவு

0
288

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில், எந்த அமைச்சரவையிலும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.

இரசாயன பசளைகளை கமத்தொழிலாளர்களுக்கு வழங்காது, சர்வதேச நாணய நிதியத்திடம் உரிய நேரத்தில் செல்லாது, மக்களை கடும் கஷ்டத்திற்கு உள்ளாகி இருக்கும் அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் கீழ் அமைச்சு பதவிகளை பெறப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக அதன் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து பதவிகளை பெற்றுக்கொள்ள தயாராகி வருவதாக அரசியல் வட்டாரதத்தில் வதந்தி பரவி வருகிறது எனவும் அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை எம்பிலிப்பிட்டிய நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, ஏனைய கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க விரும்பவில்லை என கூறியிருந்தார்.

ஐக்கிய மக்கள் தனிக் கட்சியாக மக்களின் விருப்பத்துடன் அரசாங்கம் ஒன்றை அமைக்கும். மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு எங்களிடம் உள்ளது. திருட்டு பொதுஜன பெரமுனவுடன் அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான உடன்பாடுகள் இல்லை. திருடர்களுடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதில்லை என்பதை நாட்டுக்கு காண்பிப்போம் எனவும் சஜித் தெரிவித்திருந்தார்.