மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணப் பற்றாக்குறை: உதவி கோரும் சுகாதார அமைச்சு

0
508

நாட்டின் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணப்  பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

இந்தநிலையில் எதிர்வரும் 90 நாட்களில் புதிய இருப்புக்கள் வரும் வரை இந்த பற்றாக்குறை நிலையை நிர்வகிப்பதற்கு உதவுமாறு இலங்கையின் சுகாதார அமைச்சு, மருத்துவ சங்கங்கள் மற்றும் சுகாதாரத் துறையில் உள்ள நிபுணர்களின் உதவியை நாடியுள்ளது.

அந்த வகையில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், மருத்துவ நிபுணர்கள் சங்கம், தாதியர் சங்கங்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உள்ளிட்ட சுகாதார துறை தொழிற்சங்கங்களின் உதவியை அமைச்சு நாடியுள்ளதாக புதிய சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலை நிர்வகிக்க இந்த தொழிற்சங்கங்கள் மற்றும் சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய நிபுணர்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

இது அடுத்த 90 நாட்களுக்கு முக்கியமானதாக இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய கடன் வரியின் கீழ் சில அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் வருகையை அரசாங்கம் விரைவில் எதிர்பார்க்கிறது.

எனினும் உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நிதி உதவியுடனான கூடுதல் பங்குகள், அடுத்த மூன்று மாதங்களுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

இந்த பங்குகள் வரும் வரை சுகாதாரத்துறையை நிர்வகிக்க முடிந்தால், அடுத்த ஆண்டு வரை இலங்கையிடம் மருந்து மற்றும் உபகரணங்கள் போதுமானளவில் இருக்கும் என்று அமைச்சர் கூறியுள்ளார்

சுகாதார அமைச்சகம் இந்த வாரம் 280 நாணயக் கடிதங்களைத் திறந்தும்கூட மருந்து மற்றும் உபகரணங்களை கொள்வனவு முடியாமல் போயுள்ளது.

இந்தியக் கடன்வரி மூலம் மருந்துகளை வாங்கும் போது, சில விநியோகஸ்தர்கள் அவற்றுக்கான கொடுப்பனவை ரூபாய்க்கு பதிலாக அமெரிக்க டொலரில் செலுத்த வேண்டும் என்று கோரியதால், அரசாங்கம்  சில சிரமங்களை எதிர்கொண்டது.

இதனால் விநியோகத்தில் சிறிது காலதாமதம் ஏற்பட்டது. எவ்வாறாயினும், இந்த விடயம் குறித்து அரசாங்கம் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும் விளக்கமளித்ததையடுத்து சிரமங்கள் சமாளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.